30 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழனுமா..? கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!


அக்காலத்தில் 50 வயதிற்கு மேல் தான் பல ஆரோக்கிய பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இக்கால தலைமுறையினர் 40 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தாலே அது அதிசயமாக உள்ளது.

ஏனெனில் 30 வயதிலேயே பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான் முக்கிய காரணம்.
இவற்றால் இதய நோய், நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை போன்ற பலவற்றை இளமையிலேயே பலர் சந்தித்து சமாளித்து வருகிறார்கள். உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா?

உடலில் பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள். இவற்றால் 30 வயதிற்கு மேல் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கான்கள் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்திற்கு செல்லும் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தங்கி இரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்துவதைத் தடுத்து, இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும். மேலும் இது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

செர்ரிப் பழங்கள்
செர்ரிப் பழங்களில் ஆந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது. இவை கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் காலை வேளையில் 200 கிராம் செர்ரிப் பழங்களை எடுத்து வந்தவர்களுக்கு, உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளின் அளவு 60 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே வாரத்திற்கு 3-4 முறை ஒரு டஜன் செர்ரிப் பழங்களை உட்கொண்டு வருவது நல்லது.

பாதாம்
ஆய்வு ஒன்றில் 20 பேர் தினமும் 60 கிராம் பாதாமை 4 வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்ததால், 9 சதவீதம் இரத்த சர்க்கரை அளவு குறைந்ததோடு, இதய நோய் மற்றும் நீரிழிவின் தாக்கத்தை குறைப்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு ஆய்வில் 22 பேர் பாதாமை உட்கொண்டு வந்ததில், 6 சதவீதம் கெட்ட கொலஸ்ட்ராடல் அளவு குறைந்ததோடு, 6 சதவீதம் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே பாதாமை உப்பு சேர்க்காமல், சாப்பிடுவது நல்லது.

மீன்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இவை இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை சீராக்கவும் உதவும். அதிலும் சால்மன், கானாங்கெளுத்தி, சூரை, மத்தி போன்ற மீன்களில் இச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறையும். அதிலும் வாரம் 4 முறை இதனை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

சோயா பீன்ஸ்
சோயாவில் உள்ள ஐசோப்ளேவோன்களுக்கும், கொலஸ்ட்ரால் குறைவது, பெண்களுக்கு இறுதி மாதவிடாய்க்கு பின் எலும்பின் அடர்த்தி அதிகரிப்பது, ஆண்களின் கருவளத்தை அதிகரிப்பது போன்றவற்றிற்கும் தொடர்புள்ளது. எனவே இவற்றை வாரம் 2-3 முறை உணவில் சேர்த்து வருவது நல்ல பலனைத் தரும்.

தக்காளி
தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் வளர்வதையும், பரவுவதையும் தடுக்கும். அதுமட்டுமின்றி, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதையும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் உடற்பயிற்சி செய்து 20 நிமிடங்கள் கழித்து 150 மிலி தக்காளி ஜூஸ் குடித்து வந்ததில், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் வயிற்று புற்றுநோயும், இதய நோயும் வருவது தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது. பொதுவாக தக்காளியை வேக வைத்து சாப்பிடுவதால், அதில் உள்ள லைகோபைன் எளிதாக உடலால் உறிஞ்சப்படும்.

மாட்டுப்பால்
சுத்தமான கொழுப்புமிக்க மாட்டுப்பால் குடிப்பதன் மூலம், வயதான பின் தசைகளின் நிறை குறைவது தடுக்கப்பட்டு பராமரிக்கப்படும். மேலும் 2006 இல் மேற்கொண்ட ஆய்வில், கொழுப்புமிக்க பாலை உடற்பயிற்சி செய்த பின் குடிப்பதால், தசைகளின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, அதன் வலிமையும் கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 100மிலி கொழுப்புமிக்க பாலில் 118 மிகி கால்சியம் உள்ளதால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்தது. எனவே இத்தகைய கொழுப்புமிக்க பாலை கஞ்சி, செரில், டீ, காபி மற்றும் ஸ்மூத்தி என்று பல வழிகளில் சாப்பிடலாம். குறிப்பாக ஆண்கள் அளவுக்கு அதிகமாக எடுத்தால், புரோஸ்ரேட் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது. எனவே எதிலும் அளவு மிகவும் முக்கியம்.

சிக்கன்
சிக்கனில் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. அதிலும் 200 கிராம் தோல் நீக்கப்பட்ட சிக்கனில் 60 கிராம் புரோட்டீன் உள்ளது. இதனால் உடல் எடை மற்றும் தசையின் வளர்ச்சியை சீராக பராமரிக்கலாம். எனவே 30 வயதிற்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகளுள் சிக்கனும் ஒன்று என்பதை மறக்காதீர்கள்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!