ஆயிரம் மைல்கள் கடந்து இந்தியரை கரம் பிடித்த தென்கொரிய இளம்பெண்!

தென்கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலரை கரம் பிடிக்க ஆயிரம் மைல்கள் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் சுக்ஜித் சிங். 4 ஆண்டுகளுக்கு முன் தென்கொரியாவுக்கு வேலை தேடி சென்ற அவருக்கு, காபி கடை ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அதே கடையில், தென்கொரியாவை சேர்ந்த கிம் போ-நீ என்ற இளம்பெண்ணும் வேலையில் சேர்ந்துள்ளார். பணம் செலுத்தும் கவுன்ட்டரில் உயரதிகாரியாக பணியில் இருந்த கிம்முக்கு அப்போது வயது 23.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி சுக்ஜித் சிங் கூறும்போது, பூசன் நகரில் இருந்தபோது, கிம்மை சந்தித்தேன்.

நான் கொரிய மொழியை கற்று கொண்டிருந்தேன். அதனால், அவருடன் உரையாட முடிந்தது. 4 ஆண்டுகளாக எங்களுக்கு இடையே லிவ்-இன் உறவு முறை இருந்தது.

நான் இந்தியா வந்தடைந்ததும், 2 மாதங்களுக்கு பின்னர் கிம்மும் என்னை பின்தொடர்ந்து இந்தியாவுக்கு வந்து விட்டார் என கூறியுள்ளார்.

இதன்பின்பு, இருவரும் உள்ளூரில் உள்ள குருத்வாராவில் சீக்கிய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் பண்ணை இல்லத்தில் ஒன்றாக கிம் வசித்து வருகிறார்.

3 மாத கால விசாவில் இந்தியா வந்துள்ள கிம், ஒரு மாதத்திற்கு பின்பு, சொந்த நாட்டுக்கு செல்ல இருக்கிறார். இதேபோன்று, 3 மாதங்களுக்கு பின்னர் தென்கொரியாவின் பூசன் நகருக்கு செல்ல சிங் திட்டமிட்டு உள்ளார்.

இந்திய கலாசார விசயங்களை கிம் விரும்புகிறார். அதிலும் பஞ்சாபி பாடல்களை விரும்பி கேட்கிறார். உள்ளூர் மொழி தெரியாவிட்டாலும் எங்களுடைய இசையை அவர் ரசிக்கிறார்.

அவருக்கு ஒவ்வொன்றும் புதிதாக உள்ளது என கூறும் சிங், இருவரும் தென்கொரியாவுக்கு திரும்பி, அந்நாட்டிலேயே வசிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என கூறியுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!