அன்றாடம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் அவை இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
* தூக்கத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது. தினமும் சில மணி நேரமாவது தடையற்ற ஆழ்ந்த தூக்கம் அவசிய மானது. தூக்கமின்மை மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். இதயத்தின் செயல்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
* குறட்டை விடும் பழக்கமும் இதயத்திற்கு கேடு தரும். குறட்டை விடும்போது தொண்டை தசைகள் காற்று செல்லும் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும். அதனால் சுவாசத்தில் கலந்து செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும்.
குறட்டை பிரச்சினை நீண்டகாலமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நல கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடும்.
* தினமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பது புகைபிடிக்கும் பழக்கத்தை காட்டிலும் மோசமானது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடமாடுவது அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தாலும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதயத்திற்கு நல்லதல்ல.
* மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியமானது. நீண்ட கால மன அழுத்தம் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் தமனி சுவர்கள் சேதமடையும். மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகளை கற்றுக்கொள்வது உடலுக்கும், மனதுக்கும் பலனளிக்கும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஆழ்ந்த சுவாச பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
* சமையலில் உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. அதில் இருக்கும் சோடியம் தண்ணீரிலும், ரத்தத்திலும் அதிகம் கலக்கும்போது ரத்தத்தின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். இதயத்திற்கும் அழுத்தம் கொடுக்கும். அதனால் இதய செயலிழப்பு ஏற்பட வழி வகுக்கும். உடலின் தேவைக்கேற்ப போது மான ரத்தத்தை இதயம் பம்ப் செய்ய முடியாத போது இதய செயலிழப்பு உண்டாகும்.
* இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், கோழி, மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
* இதயத்தை ஆரோக்கியமாக வைத் திருப்பதற்கு ஈறுகளின் ஆரோக்கியத்தை பேணுவது இன்றியமையாதது. வாய் வழியாக பல நோய்கள் உருவாகின்றன. முதலில் பற்களில் தொற்றுகள் பரவி இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.
* தினமும் தவறாமல் ஒரு கப் காபி பருகுவது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காபியை தவறாமல் உட்கொள்ளும்போது இதய தமனிகளில் கால்சியம் சீராக இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
* கைகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதில் பாக்டீரியாக்கள் படிந்து விடும். சாப்பிடும்போது உடலுக்குள் புகுந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!