நாட்டுக்கோழி இனங்களில் கடக்நாத் என்ற கருங்கோழி வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.
கடக்நாத் கோழி இறைச்சியில் அதிக அளவில் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் இருக்கின்றன.. பண்ணை தொழில் முனைவோர் கடக்நாத் கோழிகளை சிறிய முதலீட்டில் வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.
கருங்கால் கோழிகள் கலிமாயி என்று அழைக்கப்படும் கருங்கோழிகள் மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவை.
இதில் அடர் கருப்பு, பென்சில் கருப்பு மற்றும் மயில் கருப்பு என்று மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றின் இறக்கை முதல் இறைச்சி வரை அடர்ந்த கருப்பு நிறத்தில் காணப்படும்.
புறக்கடை வளர்ப்பு முறையில் 50 கோழிகள் வரை எளிதாக வளர்க்கலாம். கடக்நாத் கோழிகள் அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் எந்த பருவநிலையிலும் வளரக்கூடியவை.
இதில் சேவல் 2 கிலோ எடை வரையும், பெட்டை கோழிகள் 1.5 கிலோ எடை வரை வளரும். இந்த கோழிகள் 75 முதல் 90 நாட்களில் 750 கிராம் எடையை எட்டும். இவை, ஒரு ஆண்டில் சராசரியாக 60 முதல் 90 முட்டைகள் இடும்.
இது மற்ற நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு. ஆனால், இந்த கோழி மருத்துவ குணமுள்ள இறைச்சிக்காக வளர்க்கப்படுவதால் முட்டை இடும் அளவு பெரிதாக எடுத்து கொள்ளப்படுவதில்லை.
இந்த கோழிகளுக்கு முதல் மாதத்திற்கு புரதம் நிறைந்த அடர் தீவனங்களை அளிக்க வேண்டும். பொதுவாக, குருணை, கம்பு உள்ளிட்ட நாட்டுத் தீவனங்களை அளிக்கலாம்.
பண்ணையில் வளர்க்கும் போது 7 முதல் 14 வாரம் வரை இது போல் தீவனம் அளிக்கலாம். இன்றைக்கு, ஆட்டு இறைச்சிக்கு நிகராக விலை இருக்கும் இறைச்சியில் கடக்நாத் கோழி இறைச்சியும் ஒன்றாகும்.
இது வடமாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. தென்மாநிலங்களில் இதன் இறைச்சியின் மருத்துவ குணங்களுக்காக தற்போது பரவலாக வளர்க்கப்படுகிறது.
இதன் இறைச்சி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. புறக்கடை வளர்ப்பில் 50 கோழிகள் என்ற அளவில் வளர்த்தாலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.40 ஆயிரம் என்ற அளவில் வருமானம் ஈட்டலாம்.
மருத்துவ குணங்கள் கடக்நாத் கோழியில் வெறும் 0.73 என்ற அளவிலேயே கொழுப்பு காணப்படுகிறது. இதனால், கடக்நாத் இறைச்சி ெகாழுப்பு அவ்வளவாக இல்லாத இறைச்சியாக அனைவருக்கும் ஏற்ற உணவாக ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதன் இறைச்சியில் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படும் 18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த அமினோ அமிலங்கள் தசைநார்களின் வளர்ச்சிக்கும் ரத்த குழாய்களின் நீட்சிக்கும் உதவுகின்றன.
இது தவிர, வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளிட்டவை உள்ளன. குறிப்பாக, வைட்டமின் ஈ ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால், இதயம் சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
மேலும், இறைச்சியில் காணப்படும் இரும்பு சத்து ரத்தச் சோகை பாதிப்பை தடுத்து உடலின் பலவீனத்தை போக்குகிறது.
மேலும், ரத்தத்தில் அதிக அளவு ஹீமோகுளோபின் உருவாகவும் துணை புரிகிறது. இதன் இறைச்சியில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்பட 20-க்கும் மேற்பட்ட நுண்ணூட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. இதில், பாஸ்பரஸ் சத்து எலும்புகளின் வலிமைக்கு உதவுகிறது.
இதன் இறைச்சியில் உள்ள கால்சியமானது, மூட்டு தேய்மானம் உள்ளிட்ட எலும்பு சார்ந்த நோய்கள் வருவதை கட்டுப்படுத்துவதுடன் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு துணை புரிகிறது.
நரம்புத்தளர்ச்சி உடையவர்கள் சிறிது காலம் கடக்நாத் கோழி இறைச்சியை உண்டால் உடலில் பலவீனம் நீங்கி அபரிமிதமான வலிமை உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
பெண்களின் கருப்பை அழற்சி, ரத்தப்போக்கு, கருச்சிதைவு போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுவதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!