குளிர்காலத்தில் அதிகமாக தொப்பை போடுவதற்கு என்ன காரணம்..? தடுக்க இப்படி செய்யுங்க..!


மற்ற பருவ காலங்களைவிட குளிர்காலத்தில் நம்முடைய உடல் எடை இயல்பாகவே அதிகரிக்கச் செய்யும். அது ஏனென்று தெரியுமா உங்களுக்கு?…

பொதுவாகவே மற்ற காலங்களைவிட குளிர்காலத்தில் இதமாக இருக்க வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதனாலேயே இயல்புக்கு மீறி அவ்வப்போது நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுவிடுவோம்.

அந்த சமயங்களில் எல்லா வகையான உணவுகளையும் ருசி பார்க்க வேண்டுமென்று மனம் ஏங்கும். கால்கள் துறுதுறுவென இருக்கும். அதனால் வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிட்டு உடல் எடையும் அதிகரித்து விடும்.


சரி. குளிருக்கு இதமா ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும். ஆனா வெயிட் போடக்கூடாது… அதுக்கு என்ன செய்யலாம்?… இதோ உங்களுக்காக சிம்பிளான ஐடியாக்கள்…

முதலில் ஜிம்மில் சேருங்கள். ஜிம்முக்கு காலையோ மாலையோ போகும்போது உடலும் சூடாகும். குளிருக்கு இதமாக உடல்வெப்பநிலை மாறும். சாதாரணமாக வீட்டில் ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்வதைவிட, ஜிம்மில் பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளலாம். அதோடு மற்றவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைப்பதால் நிறைய டயட் ஐடியாக்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதன்மூலம் குறுகிய காலத்தில் எடையைக் குறைக்க முடியும்.


மலையேற்றம் செய்வது மற்ற காலங்களைவிட பனிக்காலத்தில் மேற்கொள்வது தான் சிறந்தது. மெற்ற பருவங்களில் லேசான சிரமத்துடன் மலையேறிவிடுவீர்கள். ஆனால் பனிக்காலத்தில் பனி மற்றும் புகைமூட்டங்களுக்கு இடையே மலையேறுவது சற்று கடினம். அதனால் நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அது உடல் தசைகளின் இயக்கத்துக்கும் நல்லது. கலோரிகளை எரிக்கவும் உதவும்.

காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் கட்டாயம் நடைப்பயிற்ச் செல்ல வேண்டும். நடைப்பயிற்சி கலோரிகளை எரிப்பதோடு மட்டுமல்லாது உடலுக்குத் தேவையான ஆக்சிஜனையும் கிடைக்கச் செய்யும். மன அழுத்தத்தையும் கோபத்தையும் குறைக்கும். நிறைய செலவு செய்து உபகரணங்கள் வாங்கி உடற்பயிற்சி செய்வதைவிட செலவே இல்லாமல் ஆரோக்கியமாக எடையைக் குறைக்க ஏற்ற முறை தான் இந்த வாக்கிங்.


வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை என்பவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. தற்போது இணையத்தில் ஏராளமான உடற்பயிற்சி செய்யும் மாடல் விடியோக்களும் நடனத்துடன் கூடிய உடற்பயிற்சிகளும் நிறைய கிடைக்கின்றன. அதைப்பார்த்துக் கொண்டே வீட்டிலேயே மகிழ்ச்சியாக உடற்பயிற்சி செய்யலாம்.

எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்களோ அந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். குறிப்பாக நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதோடு மீன், பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், ஆலிவ் ஆயில் ஆகியவற்றையும் உணவோடு சேர்து்துக் கொள்ளுங்கள்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!