வலிமையான தோற்பட்டையை பெற எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்..?


தோற்பட்டை என்பது நமது கைகளை தாங்கி நிற்கும் முக்கிய பகுதி ஆகும். தோற்பட்டையில் ஏதேனும் உபாதைகள் ஏற்படின், அது தோற்பட்டையை மாத்திரமின்றி முதுகுப் பகுதி மற்றும் கைகளையும் பாதிக்கும்.

அதே போல் வலிமையான தோற்பட்டையைக் கொண்டிருப்பதன் மூலம் திடகாத்திரமான மற்றும் ஆரோக்கியமான தேகத்தையும் பெற முடியும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.
அந்த வலிமையான தோற்பட்டையைப் பெற நாம் எவ்வாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

தோள்பட்டைத் தசையை வலுவாக்கும் இந்த பயிற்சிக்கு வன்ஆர்ம்டம்பெல்ரோ என்று பெயர். சற்று உயரமான சமதளப் படுக்கையின் இரண்டு பக்கங்களிலும் டம்பெல்களை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இடது கையைச் சமதளப் படுக்கையில் நேராக வைக்க வேண்டும். அதன் பின் இடது காலை மடித்த நிலையில் படுக்கையில் வைக்க வேண்டும்.


இப்போது வலது கையால் டம்பெல்லைத் தூக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி வலதுகை முட்டியை மடித்து டம்பெல்லை மேலே உயர்த்த வேண்டும்.

சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதே போன்று இடது பக்கமும் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நடு முதுகுத்தசை, பைசெப்ஸ் மற்றும் தோள்பட்டைத் தசைகள் என்பன வலுப்பெறும்.

குறிப்பு: முதுகுவலி உள்ளவர்கள், முதுகில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் இந்த பயிற்சியை செய்யக் கூடாது. – © tamilvoicenews.com | All Rights Reserved