ஜிம்மிற்கு முதன் முதலாக செல்லவுள்ளீர்களா? கட்டாயம் இதை படியுங்கள்!


உடற்பயிற்சி செய்வதென்பது உண்மையில் எமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய செயற்பாடாகும். இந்த உடற்பயிற்சிகள் எமது உடலை நோயிலிருந்து பாதுகாக்க உதவி புரிவது மட்டுமன்றி மனரீதியான உளைச்சல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது.

இன்றைய உலகில், உடற்பயிற்சி செய்வதென்பது உடல் எடையை குறைக்க மட்டுமல்ல. உடல் எடையை கூட்டுவதற்கும் அதே போன்று உடலை வசீகரமாக வைத்திருப்பதற்கும் இந்த உடற்பயிற்சி உதவி புரிகின்றது.

எம்மில் பலர் சரியான அறிவில்லாமல் ஏதோ ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுவிடுவதுண்டு. ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வதற்கு முன் நாம் எவற்றையெல்லாம் கருத்திற் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

01. இலவச ட்ரயல் சலுகை தரும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள்.
இப்போதுள்ள பல உடற்பயிற்சி நிலையங்களில் 3 தொடக்கம் 7 நாட்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும். கட்டணங்கள் எவற்றையும் செலுத்த முன்னர் அவ்வாறான உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று தன்மையை அறிந்து கொள்ளுங்கள். எந்த உடற்பயிற்சி நிலையம் சிறந்தது என்பதை தீர்மானித்துக் கொண்டு கட்டணங்களை செலுத்துங்கள்.

02. அருகாமையில் உள்ள உடற்பயிற்சி நிலையமொன்றை தெரிவு செய்யுங்கள்
ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றை தெரிவு செய்யுங்கள். ஏனெனில் தூர இடங்களில் உள்ள உடற்பயிற்சி நிலையங்களை தெரிவு செய்யும் பட்சத்தில் வேலைப் பழு அதிகரிக்கும் நேரங்களில் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வது படிப்படியாக குறைவடையும்.


03. சுத்தம்
உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லும் போது முக்கியமாக அந்த உடற்பயிற்சி நிலையத்தின் சுத்தம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். சுத்தம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

04. வைத்திய பரிசோதனை மேற்கொள்ளல்
உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வதற்கு முன்னதாக வைத்தியர் ஒருவரை நாடி முழு உடலையும் செக் அப் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு இதயம் மற்றும் ஏனைய பகுதிகளில் பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் உடலை வருத்தி உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது அது பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரும்.

05. உடற்பயிற்சி நிபுணரின் உதவியை நாடுங்கள்
உடற்பயிற்சி நிபுணர் ஒருவரை நாடி, உங்களுக்கு எவ்வாறான உடற்பயிற்சிகள் அவசியம் மற்றும் எந்தெந்த நாட்களில் இவ்வாறான உடற்பயிந்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அறிவுறை பெறுங்கள்.
06. உங்கள் உடம்பில் உள்ள காயங்கள் தொடர்பில் உடற்பயிற்சி நிபுணருக்கு தெரியப்படுத்துங்கள்
மூட்டு மற்றும் முதுகு போன்ற பகுதிகளில் காயங்களோ அல்லது நீண்ட நாட்களாக வலியோ காணப்படுமாயின் அவை தொடர்பில் உடற்பயிற்சி நிபுணரிடம் தெரியப்படுத்துங்கள்.

07. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வதில் மட்டும் அக்கறை கொள்ளாது உண்ணும் உணவுகள் தொடர்பிலும் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். போதிய ஊட்டச் சத்தும் உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்குச் செல்ல வேண்டும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!