ஒல்லியான குழந்தையை குண்டாக்கும் உணவுகள்.!

குழந்தைகளின் உணவு எனும் போது சத்துக்களைத் தாண்டி ,குழந்தைகளின் எடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது குழந்தைகளுக்கு உணவளிப்பதன் முக்கிய நோக்கம் வளர்ச்சியுடன், அவர்களின் எடையையும் அதிகரிப்பது ஆகும்.

குழந்தைகள் பொதுவாக உணவு சாப்பிட அடம்பிடிப்பதால், அவர்கள் சாப்பிடுவது சிறிய அளவு உணவு என்றாலும் அது சத்து மிக்கதாகவும், குழந்தையின் எடை அதிகரிப்பதாகவும் இருக்கவே தாய்மார்கள் விரும்புகிறார்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளது.. இது ஒரு அதிக கலோரிகளைக் கொண்ட உணவும் ஆகும்.குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும்.

வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு. அவர்களுக்கு ஒரு தனி பழமாக கொடுக்கலாம். வாழைப்பழத்தை விரும்பாத குழந்தைகளுக்கு பான்கேக் (pan cake) , வாழைப்பழ பணியாரம், வாழைப்பழ கேக் செய்யும் போது அதில் கலந்து கொடுக்கலாம்.

அல்லது ஏனைய பழங்களுடன் சேர்த்து ஸ்மூதியாகவும் (Smoothie) கொடுக்கலாம். வெளியில் செல்லும் வேளைகளில் கூட, உங்களுடன் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு இலகுவாக கொடுக்கலாம்.

தானியங்களும் பருப்புவகைகளும் (Nuts & Grains)
அவல், கொண்டைக்கடலை, குரக்கன், தினை,சோளம் ,பயறு போன்ற தானிய வகைகள் மற்றும் கச்சான், பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளில் புரதம், மெக்னீசியம், கல்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.

இந்த வகை தானியங்களில் இறைச்சியிலிருந்து நாம் பெறுவதை விட அதிக புரதத்தை பெறலாம். அதோடு இவை இறைச்சி மற்றும் மீன்களை விடவும் மிகவும் மலிவாக இருப்பது இன்னும் நல்லது. ஆறு மாதத்திலிருந்து, குழந்தையின் உணவில் தானிய வகைகளை கஞ்சியாக ,கூழாக,களியாக சேர்க்கலாம்.

அவகாடோ
அவகாடோ அல்லது ஆனைக்கொய்யா என்பது ஒரு ஆரோக்கியமான பழமாகும். குழந்தைகளின் உணவில் அவகாடோவை சேர்ப்பது உடல் எடையை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும்.

இது விட்டமின்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவாகும். இதனால் குழந்தைக்கு உணவு கொடுக்கும் ஆரம்ப நாட்களிலிருந்து கொடுக்கக்கூடிய மிகவும் சத்தான உணவாகும். குழந்தைகளுக்கு இதை நேரடியாகவோ அல்லது அவகாடோ ஜூஸ், அவகாடோ ஸ்மூதியாக தயாரித்துக் கொடுக்கலாம்.

நெய்
சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் வாங்கி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் இந்த சுத்திகரிக்கப்பட்ட நெய் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் ஏற்ற நல்லதொரு சத்தான உணவு. தனியாக மாத்திரமல்லாமல் பிற உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய இது உண்மையில் குழந்தைகளின் உணவிற்கு சேர்க்ககூடிய மிகவும் பயனுள்ள உணவாகும்.

சீஸ்
சீஸ் (பாலாடைக்கட்டி) மிகவும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதாவது சீஸ் என்பது கல்சியம், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது. இதனால் உப்பு சேர்க்காத சீஸ்களை குழந்தைக்குக் கொடுப்பது எடையை அதிகரிக்க உதவும்.

யோகர்ட்
வயது வந்தவர்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை கூட பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சிறந்த உணவு யோகர்ட் ஆகும். யோகர்ட்டில் கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் கல்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்து தேவைக்கும் , எடை அதிகரிப்புக்கும் சரியான வயதில் குழந்தைக்கு தயிரை வழங்கத் தொடங்குவது சிறந்தது. அதோடு வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும். பழங்கள் சேர்க்கப்பட்ட பலவிதமான யோகர்ட்களும் சந்தையில் கிடைக்கிறது.

இருப்பினும், அவற்றை குழந்தைக்கு கொடுப்பதற்கு ,உப்பு மற்றும் சர்க்கரையின் அளவுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அல்லது மருத்துவ ஆலோசனையின்படி பின்பற்றுவது மிகவும் நல்லது. இதைவிட சாதாரண தயிருடன் பழங்களைச் சேர்த்து கொடுக்கலாம். இப்படி நீங்களே வீட்டில் தயாரித்து கொடுப்பது மிக சிறந்தது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!