‘நைட் ஷிப்ட்’ வேலை செய்பவர்கள் கட்டாயம் இதை படிங்க..!

இரவுப் பணிக்காக முரண்பாடான நேரங்களில் உணவு சாப்பிடுவது, வெகு நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது போன்றவைகளும் உடலுக்கு கூடுதல் பிரச்சினைகளை தரும்.

இரவு தூங்குவதற்கானது. ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு தேவையான அருமருந்து. ஆனால் மருத்துவம், காவல்துறை, சாப்ட்வேர், கால்சென்டர் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரவிலும் பணியாற்ற வேண்டியதிருக்கிறது. இரவில் விழித்திருந்து வேலை செய்துவிட்டு, பகலில் அவர்கள் தூங்கும் சூழ்நிலை உருவாகிறது.

இரவில் விழித்திருப்பதும், பகலில் தூங்குவதும் இயற்கையான உடல் இயக்க நிலையை தடம் புரளச்செய்து, நோய்களை உருவாக்குகிறது. அவர்களுக்கு தூக்கத்தில் ஏற்படும் பாதிப்புமட்டுமல்ல, வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாத நெருக்கடியும் உருவாகும். இரவுப் பணிக்காக முரண்பாடான நேரங்களில் உணவு சாப்பிடுவது, வெகு நேரம் உட்கார்ந்தே வேலைபார்ப்பது போன்றவைகளும் உடலுக்கு கூடுதல் பிரச்சினைகளை தரும். இவர்களுக்கு மற்றவர்களைவிட மனஅழுத்தமும் அதிகரிக்கும்.

பிரச்சினைகளின்றி இரவுப் பணி செய்யவும், பகலில் நன்றாக தூங்கி உடல்நலனைப் பேணவும் சிறப்பான ஆலோசனைகள்!

நமது வீட்டு சுவர் கடிகாரம் போன்று ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் 24 மணி நேரமும் உயிர்க்கடிகாரம் ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. உடலை சீராக இயக்கும் அந்த கடிகாரம்தான், மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ். ‘மெலட்டோனின்’ என்ற தூக்கத்திற்கான ஹார்மோனை உற்பத்திசெய்கிறது. இரவில் இது அதிகமாக உற்பத்தியாகி, தூக்கத்திற்கான சூழலை உருவாக்குகிறது. அப்போது தூங்காமல் விழித்திருந்து வேலை செய்துகொண்டிருந்தால் அவரது உயிர்க்கடிகாரத்தின் இயல்புநிலையில் மாற்றம் ஏற்படும். அதுவும் சிலர் இரவுப் பணி, பகல் நேர பணி என்று மாறி மாறி வேலைசெய்யும்போது உறக்கமின்மை, அதிகபட்ச சோர்வு, ஹைப்பர் டென்ஷன், சர்க்கரை நோய், உடல்பருமன் போன்றவை தோன்றும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகளால் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.

நைட் ஷிப்ட்டில் வேலை செய்பவர்களின் அறையில் போதுமான அளவில் வெளிச்சம் இருக்கவேண்டும். வெளிச்சம், தூக்கத்திற்கான ஹார்மோனான மெலட்டோனின் உற்பத்தியை குறைத்து விழிப்பு நிலையை உருவாக்கும். இரவில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது தூக்க கலக்கம் ஏற்பட்டால், அப்போது சிறிது நேரம் வேலையை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் நடக்கவோ, சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவோ செய்யலாம். வாய்ப்பிருந் தால் அரை மணி நேரம் தூங்கிவிட்டு பணியை தொடரலாம். அடிக்கடி ஷிப்ட் நேரத்தை மாற்றுவதும் நல்லதல்ல.

தூக்க கலக்கம் ஏற்படும்போது காபி பருகுவது தற்காலிகமாக உற்சாகத்தை தரும். ஆனால் நீண்ட நேரம் தூக்கத்தை விரட்ட காபியால் முடியாது. காபி அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை உயர்த்தும். மட்டுமின்றி பகல் நேர தூக்கத்தின் அளவையும் அதிகரிக்கும். அதனால் இரவுப்பணி செய்பவர்கள் காபி, டீ போன்றவைகளின் பயன்பாட்டை வெகுவாக குறைத்திடவேண்டும். அவர்கள் அதிக அளவு தண்ணீர் பருகவேண்டும். பழம், ஜூஸ் போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய் பலகாரங் கள் சாப்பிடுவதையும் தவிர்க்கவேண்டும். எப்போதுமே நள்ளிரவுக்கு பின்பு வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது.

இரவில் வேலைபார்த்துவிட்டு வீடு திரும்புகிறவர்கள் பகலில் அமைதியான சூழலில் 6 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்து தூங்கவேண்டும். அப்போது செல் போனை ஆப் செய்துவிடுங்கள். திரைச்சீலையை பயன்படுத்தி அறையை இருட்டு சூழலுக்கு மாற்றிவிடவேண்டும். இளம்சுடு நீரில் குளித்துவிட்டு தூங்குவது நல்லது. காலை நேரங்களிலும் எளிதாக ஜீரணமாகும் உணவையே சாப்பிடவேண்டும்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!