மூச்சுக்குழாய் சுத்தமாகும்… கைகள்,தோள்பட்டையை வலுவாக்கும் ஆசனம்

உத்தித பத்மாசனத்தை செய்தால், கைகள் வலு பெறும். அதே போல், அதிக எடை தூக்கும்போது ஏற்படும் வலியும் முழுமையாக குணமடையும். உடல் எடை முழுவதையும், கைகளால் தூக்கி நிறுத்துவதால், கைகளும், தோள்பட்டைகளும் வலுப்பெறும்.

இன்றைய இல்லத்தரசிகளுக்கு இருக்கும் வேலைப்பளு குறைவுதான். நவீன தொழில்நுட்ப உலகில், வேலைகள் மிகவும் எளிமையாக்கப் பட்டுள்ளன. இருப்பினும், இன்றும் தண்ணீர் பிடித்தல், உள்ளிட்ட வேலைகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பூர்த்தி செய்ய முடிவதில்லை.

இதனால், இல்லத்தரசிகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைகளில், அதிக எடை தூக்குவதால் ஏற்படும் கை வலி முக்கியமானது. அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கும், யோகாவில், இந்த பிரச்னைக்கு தீர்வு இல்லாமல் இருக்குமா? கட்டாயம் இருக்கிறது. யோகாவில் உள்ள உத்தித பத்மாசனத்தை செய்தால், கைகள் வலு பெறும். அதே போல், அதிக எடை தூக்கும்போது ஏற்படும் வலியும் முழுமையாக குணமடையும்.

எப்படி செய்வது?

இரண்டு கால்களையும் நீட்டி, தரையில் அமர வேண்டும். பின், வலது காலை இடது புறமாக மடக்கி, இடது தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். அதேபோல், இடது காலை வலது புறமாக மடக்கி, வலது தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். இந்த நிலையே, பத்மாசனம். ஆரம்பத்தில் பத்மாசன நிலையில் அமர்வது சற்று சிரமமானதாகவே இருக்கும்.

உத்தித பத்மாசனம் என்றால், பத்மாசன நிலையிலேயே, கைகளை கொண்டு உடலை தூக்குவதாகும். பத்மாசனத்தில் அமர்ந்தபடி, இரண்டு கைகளையும், இடுப்புக்கு நேராக தரையில் வைக்க வேண்டும். பின், கைகளை தரையில் உந்தி, உடலை தூக்க வேண்டும்.

இந்த நிலையில் குறைந்தது, 20 வினாடிகள் இருக்க வேண்டும். உடலை தூக்கி நிறுத்தும்போது, மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டியதில்லை; சீராக மூச்சு விட வேண்டும். அதேபோல், கைகள் வலித்தால், உடனடியாக உடலை கீழே இறக்க வேண்டும்.

பயன்கள்: பத்மாசனம் செய்தாலே, எண்ண அலைகளை ஒரு மனதாக செயல்படுத்த முடியும். பத்மாசனத்தில் உடலை தூக்கி நிறுத்துவதால், கவனிப்பு திறன் அதிகரிக்கும். இதனால் மாணவர்களின் கவனிப்புத்திறன், மனஒருமைப்பாடு, நினைவுத்திறன் அதிகரிப்புக்கு, இப்பயிற்சி மிகவும் நல்லது. கை வலிக்கு முக்கிய காரணம், நமது தோள் பட்டைகள் வலுவில்லாமல் இருப்பதுதான்.

உடல் எடை முழுவதையும், கைகளால் தூக்கி நிறுத்துவதால், கைகளும், தோள்பட்டைகளும் வலுப்பெறும். புதிதாக முதல்கட்டமாக பயிற்சி எடுக்கும்போது, 20 வினாடிகள் வரை, இந்த நிலையில் இருக்கலாம். நன்கு பயிற்சி எடுத்தபின், அதிக வினாடிகள் இருக்கலாம்.

அதிக நேரம் இதே நிலையில் இருந்தால், மூச்சுக்குழாய் சுத்தமாகும். இதனால், இரவு நேரம் மற்றும் காலநிலை மாற்றத்தின்போது ஏற்படும், சுவாசப்பிரச்னைகள் சீராகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!