வெயில் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..?

தண்ணீர் பருகும் அளவையோ, திரவ உணவுகளை உட்கொள்வதையோ குறைத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.


கோடை காலத்தில் வெப்ப தாக்கத்தை சமாளிப்பதற்கு வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் பருக வேண்டியிருக்கும். மழைக்காலம் தொடங்கியதும் பருகும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கும். உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிக்க எல்லா பருவ காலநிலையிலும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது.

தண்ணீர் பருகும் அளவையோ, திரவ உணவுகளை உட்கொள்வதையோ குறைத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒருசில அறிகுறிகள் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

சிலருக்கு உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும். அப்படி வியர்ப்பவர்களுக்குத்தான் உடல் வறட்சி ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒருவருக்கு திடீரென்று உடலில் வறட்சி ஏற்பட்டால் அவரது உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம். உடல் வறட்சி காரணமாக சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படும்.

நீர்ச்சத்து குறைவாக இருந்தால் வாயில் போதுமான அளவு உமிழ் நீர் சுரக்காது. அப்படி உமிழ் நீர் அளவு குறைந்துபோனால் வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால் வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும்.

தொடர்ந்து உடல் வறட்சி குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் வெப்பம் அடைந்து காய்ச்சல் ஏற்படுவது அல்லது உடல் குளிர்ச்சி தன்மை அடைவது போன்ற அறிகுறிகள் தென்படும்.

நீர்ச்சத்து இல்லாதபோது உடல் வெப்பமடையக்கூடும். எந்த அளவுக்கு உடல் வெப்பமடைகிறதோ அந்த அளவுக்கு தசைப்பிடிப்பு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்து கொண்டிருந்தால் வழக்கத்தை விட இனிப்பு பொருட்களை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும். அப்போது இனிப்பு பலகாரத்திற்கு மாற்றாக வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, தக்காளி, கீரை, சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ளலாம். அது உடல் வறட்சியை போக்கி நீர்ச்சத்தை தக்கவைக்க துணை புரியும்.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது மூளையின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

தினமும் ஆண்கள் 4 லிட்டர் திரவ உணவுகளையும், பெண்கள் 3 லிட்டர் திரவ உணவு களையும் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மது, உடலுக்கு எனர்ஜி தரும் குளிர்பானங்கள், கார்பைன் கலந்த பானங்கள் உடல் வறட்சியை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நீர்ச்சத்து அளவை பராமரிக்க உதவும் திரவ பானங்களை தேர்ந்தெடுத்து பருக வேண்டும். அதோடு தண்ணீர் பருகுவது நல்லது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!