வெயில் காலத்தில் இதய நோயாளிகள், வயதானவர்கள் மறக்காமல் இதை செய்யுங்க..!

கோடை காலத்தில், நீர்ச்சத்து இழப்பால் உடலில் பல்வேறு உபாதைகள் தோன்றும். இதையொட்டி இதய நோயாளிகள், வயதானவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.


பொதுவாக மனிதனின் ஆரோக்கியம் தட்பவெப்பநிலையை போன்றே மாறுதலுக்கு உட்பட்டது. குளிர், மழை, வெயில் என அந்தந்த பருவ காலத்துக்கு தக்கவாறு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அத்தகைய தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு நம்மை தற்காத்து கொண்டால் உடல்நல பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம். குளிர், மழை காலத்தில் சளி, இருமல், காய்ச்சலாலும், கோடை காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைவினால் பல்வேறு உபாதைகளும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக நமது பழக்க, வழக்கத்தை மாற்றிக்கொண்டால் போதும். ஆரோக்கிய குறைபாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது:-

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் பல உபாதைகளை சந்திக்கிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டிப்பட்டு அதன் ஓட்டம் பாதிக்கிறது. அதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் சட்டென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. உடலில் இதுபோன்று ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க, குறிப்பாக உடல், தனது நீர்ச்சத்தை இழக்காமல் காத்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வெயிலில் நடமாட்டத்தை குறைத்து கொள்வது நல்லது. பகலில் நடமாடும் போது குடைகளை பயன்படுத்த வேண்டும். அதேபோல் ‘பாலிஸ்டர்’ ரக ஆடைகளை தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. பருத்தி ஆடைகள் வியர்வையை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டது. மற்ற ரக ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது. அதனால் உடலில் அரிப்பு, கொப்பளங்கள் உண்டாகி தோல் நோய்கள் ஏற்படும். இதை தவிர்க்க காலை, மாலை என 2 முறை குளிப்பது நல்லது.

அதேபோல் டீ, காபி, குளிர்பானங்களை தவிர்த்து மோர், இளநீர், பதநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ணுவது உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். வெயிலில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் குளிர்சாதன பெட்டிகளில் ஜில்லென்று இருக்கும் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது. சிறிது நேரம் கழித்து மண்பானை தண்ணீரை அருந்தலாம்.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு தாகம் எடுப்பது தெரியாது. அதனால் அவர்களின் தாகம் அறிந்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!