வெயில் காலத்தில் பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்..?

உணவில் கோடை கால பழங்களை அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்கும். கோடைகால பழங்களில் சுவைக்காக எதையும் சேர்க்காமல் பழத்தை தனியாக அப்படியே சாப்பிடுவது மட்டுமே முழு பலனைத்தரும்.


கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்வதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மற்ற பருவ காலங்களில் விளையும் பழங்களை விட கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். அவற்றின் சுவையும் பிரமாதமாக இருக்கும். உணவில் கோடை கால பழங்களை அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளிக்கும். இருப்பினும் சில வகை கோடை கால பழங்களில் அதிக சர்க்கரையும், அதிக கலோரியும் உள்ளது.

கோடை கால பழங்களில் மாம்பழத்திற்குதான் முதலிடம். அமெரிக்க வேளாண்மைத்துறையின் ஆய்வின்படி, 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரி உள்ளது. குறைந்த கலோரி உணவுகளை சாப்பிட விரும்புபவர்கள் மாம்பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் கொண்டவர்கள் மாம்பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கோடைகாலத்தில் தர்ப்பூசணி, முலாம் பழங்கள் அதிக அளவில் விளையும். 100 கிராம் தர்ப்பூசணி பழத்தில் 30 கலோரி இருக்கிறது. முலாம் பழத்தில் 34 கலோரி உள்ளது. உஷ்ணத்தை குறைக்க இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானது.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் பெர்ரி வகை பழங்களும் கோடை காலத்தில் கிடைக்கும். 100 கிராம் மல்பெரி பழத்தில் 43 கலோரியும், ஸ்ட்ராபெர்ரி பழத்தில் 33 கலோரியும் இருக்கிறது.

ஆசிய நாடுகளில் அதிகம் விளையக்கூடிய லிச்சி பழங்களில் இருந்து கோடைகாலத்தில் பழச்சாறு தயாரித்து பரிமாறப்படுகிறது. 100 கிராம் லிச்சி பழச்சாறில் 66 கலோரி உள்ளது.

சிவப்பு நிற செர்ரி பழங்கள் பல இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. பழச்சாறாகவும் பயன்படுத்தலாம். 100 கிராம் சிவப்பு செர்ரி பழத்தில் 50 கலோரி உள்ளது.

கோடை காலத்தில் சாத்துக்குடி பழங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இது சருமம், கூந்தல் உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். 100 கிராம் சாத்துக்குடி சாறில் 43 கலோரி இருக்கிறது.

100 கிராம் பப்பாளி பழத்தில் 43 கலோரி இருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும் உதவும்.

கோடைகால பழங்களில் சுவைக்காக எதையும் சேர்க்கக்கூடாது. பழத்தை தனியாக அப்படியே சாப்பிடுவது மட்டுமே முழு பலனைத்தரும்.

நீரிழிவு மற்றும் உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்கள் டாக்டர்களின் ஆலோசனை பெற்றே பழங்களை சாப்பிடவேண்டும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!