இப்படி உடற்பயிற்சி செய்தால் ஒரே மாதத்தில் உடல் எடை குறையுமா..?

இப்போது ஜிம்முக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் எடை குறைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செல்கிறார்கள். இதில் தவறு இல்லை. ஆனால், அரச மரத்தை சுற்றியதும் அடிவயிற்றைத் தடவிப்பார்ப்பதைப் போல உடனடியாக எடை குறைய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘நான் 15 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்’ என்று ஆசைப்படுகிறார்கள்.

ஒரே மாதத்தில் இப்படி அளவுக்கு அதிகமாக எல்லாம் குறைக்க முடியாது. அப்படிக் குறைந்தாலும் அது நல்லது இல்லை. எடை எப்படி சிறிது சிறிதாகக் கூடியதோ அப்படி சிறிது சிறிதாகக் குறைப்பதுதான் நல்லது. எனவே, இலக்குகளை சிறிது சிறிதாகப் பிரித்துக்கொள்ளுங்கள். இந்த மாதம் இரண்டு கிலோ குறைக்க வேண்டும் எனத் திட்டமிடுங்கள்.

அதற்கு ஏற்ப வொர்க் அவுட் செய்யுங்கள். வாக்கிங் செய்ய தொடங்கிய முதல் நாளே ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று தடாலடியாக இறங்காதீர்கள். முதலில் கால் மணி நேரம் நடந்து பழகுங்கள். இப்படி சிறிது சிறிதாக இலக்குகளை உருவாக்கும் போது உடலும் உடற்பயிற்சிக்குத் தோதாக மாறும். சிறு சிறு இலக்குகளில் நமக்குக் கிடைக்கும் வெற்றி நம்மை உற்சாகமாகச் செயல்பட வைத்து, தொடர்ந்து ஈடுபாட்டுடன் உடற்பயிற்சியில் ஈடுபட உதவும்.

தினசரி வொர்க் அவுட் செய்வதைப் பற்றிய குறிப்புகளை எழுதிக்கொள்வது மிக நல்ல பயிற்சி. கடந்த காலத் தவறுகளைக் களைந்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட அது உதவும். ஒவ்வொரு நாள் உடற்பயிற்சியும் ஒவ்வொரு மாதிரியாக அமையும். சில நாட்களில் நாம் உற்சாகமாக இருப்போம். ஆனால், கிளைமேட் அப்படி இருக்காது. சில நாட்களில் சூழல் சரியாக இருந்தாலும் நாம் கடனே என்று செய்துகொண்டிருப்போம்.

இதனால் எல்லாம் சோர்ந்துவிட வேண்டாம். உடற்பயிற்சி செய்யும்போது அதில் ஏற்படும் முன்னேற்றம், சிக்கல்கன், குறைபாடுகள், சறுக்கல்கள் ஆகியவற்றை துல்லியமாக எழுதி வைப்பது நல்லது. உங்கள் உடலையும் மனதையும் நன்கு புரிந்துகொள்ள இந்தக் குறிப்புகள் உதவும்.

என்ன பயிற்சி செய்தீர்கள், எவ்வளவு நேரம் அல்லது எத்தனை முறை செய்தீர்கள், எவ்வளவு எடையைத் தூக்கினீர்கள், எவ்வளவு தூரம் நடந்தீர்கள், எவ்வளவு கலோரி உட்கொண்டீர்கள், எவ்வளவு எரித்தீர்கள், பயிற்சியின்போது என்ன பிரச்னை ஏற்பட்டது, அன்றைய எடை எவ்வளவு, உடலின் அளவு என்ன என அனைத்தையும் பதிவுசெய்யுங்கள். வொர்க் அவுட் பயிற்சிகள் முழுமையடையவும் நல்ல பலன் தரவும் அதைக் குறித்து வைப்பது என்பது முக்கியமான ஒரு வேலை.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!