நாம் தூக்கியெறியும் இந்த காய்க்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா..?


ஆந்திராவில் பீர்க்கங்காயில் செய்கிற காரசார துவையல், கேரளாவில் பருப்பும் பீர்க்கங்காயும் சேர்த்துச் செய்கிற கூட்டு, கர்நாடகாவில் பீர்க்கங்காய் பஜ்ஜி, மகாராஷ்டிராவில் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்த்துச் செய்கிற பீர்க்கங்காய் ஃப்ரை… இப்படி இந்தியா முழுக்க பிரபலம் பீர்க்கங்காய்.

இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பீர்க்கங்காயின் மகத்துவம் தெரிந்திருக்கிறது. ஆம்.

வியட்நாமில் பீர்க்கங்காயை சூப்பில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சீனா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்சில் அன்றாட சமையலில் அவசியம் இடம்பெறுகிற காயாக பீர்க்கங்காய் இருக்கிறது. கனடாவும் ஸ்பெயினும்கூட பீர்க்கங்காயின் பெருமையை பேசுகின்றன. இப்படி உலகம் முழுக்க வலம் வருகிற புகழ் பெற்ற காய் என்ற பெருமை பீர்க்கங்காய்க்கு உண்டு.

பீர்க்கங்காயில் நார்ச்சத்து மிகுதி. கலுாரிகள் குறைவு. அதனால் டயட்டில் இருப்பவர்கள் தாராளமாக தங்களுடைய தினசரி உணவில் பீர்க்கங்காயை எடுத்துக் கொள்ளலாம்.


அதோடு மட்டுமல்லாது, வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் இது மிகச்சிறந்த தீர்வாக அமையும்.

பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாகச் செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டாகரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் தெளிவடையவும் உதவுகிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி கல்லீரலை வலிமையடையச் செய்கிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு சிறந்த மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது.

உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எடை குறைக்க முயற்சி செய்கிறவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!