வீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஜெல்லை எப்படி தயாரிக்கலாம்..?


கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க கற்றாழையை அப்படியே சிலர் சாப்பிடுவதும் உண்டு. அழகைக் பராமரிக்க மிக அதிக அளவில் நாம் கற்றாழையை பயன்படுத்தலாம்.

ஆரோக்கிய விஷயத்துக்காக மட்டுமின்றி அழகுக்காகவும் நாம் பயன்படுத்துகிற கற்றாழை ஜெல்லை கடையில் வாங்கும்போது அதில் சில ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. ஆனால் எந்தவித ரசாயனக் கலப்பும் இல்லாமல் வீட்டிலேயே மிக ஆரோக்கியமான முறையில் கற்றாழை ஜெல்லை நம்மால் தயாரிக்க முடியும்.


தேவையான பொருட்கள்

சோற்றுக்கற்றாழை – 2

வைட்டமின் ஈ மாத்திரைகள் – 4

ஆப்பிள் சீடர் வினிகர் – கால் ஸ்பூன்


செய்முறை

சோற்றுக்கற்றாழையில் உள்ள சதைப்பகுதியை கத்தி கொண்டு நன்கு சீவி எடுத்துக் கொண்டு அதை ஸ்பூன் அல்லது பிளண்டர் கொண்டு நன்கு அடித்துக் கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அதோடு 4 வைட்டமின் மாத்திரைகளை வெட்டி அதிலுள்ள சாறினைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு, அதன்பின் ஆப்பிள் சீடர் வினிகரைச் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது கற்றாழை ஜெல் ரெடி. இது வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். உங்களுக்கு பச்சை நிறம் வேண்டுமென்றால் சமையலில் நாம் கலருக்காக பயன்படுத்தும் பச்சைநிற எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். அது சாப்பிடுவதற்காக பயன்படுத்தும் எசன்ஸ் என்பதால் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது.

இதை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி ரசாயனக் கலப்பற்ற கற்றாழை ஜெல்லை நம்முடைய வீட்டிலேயே தயாரித்து வைத்துக்கொண்டு, தலை மற்றும் முகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.- Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!