உடலில் இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உயிர் வாழலாம் என தெரியுமா..?


மனித உடல், ஒரு சிக்கலான அமைப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை.

ஆனால் அவற்றில் சில உறுப்புகள் இல்லையென்றாலும் நம்மால் உயிர்வாழ முடியும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

கண்கள், கை-கால்கள் போன்ற இரட்டை உறுப்புகளில் ஒன்றையோ இரண்டையுமோ நீக்கினாலும் ஒருவர் உயிர் வாழ முடியும். அதே போல சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரட்டை உள் உறுப்புகளில் ஒன்றை நீக்கினாலும் நம்மால் வாழ முடியும். ஆனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பித்தப்பையில் கல் உருவாகும்போது பித்தப்பை நீக்கப்படுகிறது. பித்தப்பை மிகவும் மென்மையானது என்பதால் அதனை அறுவைசிகிச்சை செய்து கற்களை நீக்கமுடியாது. எனவே, முழு பித்தப்பையையும் அகற்ற வேண்டியுள்ளது. பித்தப்பைக் கல் இருக்கும் அனைவருக்கும் பித்தப்பை நீக்கப்படமாட்டாது. நோயின் தன்மை பொறுத்து அதனை எடுத்துவிடுவார்கள்.


இதைத் தவிர குடல்வால், டான்ஸில் போன்றவை நீக்கினாலும் எந்த பிரச்சனையும் வராது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பித்தப்பையில் கட்டி வந்தால் அதனை ஒட்டி இருக்கும் கல்லீரலின் ஒரு பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டியது இருக்கும். உடல் பருமன் அறுவைசிகிச்சையில், முன்பு இரைப்பைக்கு உணவு செல்லாமல், நேரடியாக சிறுகுடலுக்குச் செல்லும் வகையில் பைபாஸ் செய்யப்பட்டது. தற்போது, இரைப்பையின் அளவை குறைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

பெண்களின் அடையாளமான மார்பகம் மார்பகப் புற்றுநோயிருந்தால் அகற்ற வேண்டியிருக்கும் அதனால் வேறு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. இதைத் தவிர தீவிர உதிரப்போக்கு அல்லது புற்றுநோய்க்கட்டி போன்றவற்றால் பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றப்படுகிறது.


இரைப்பை, சிறுகுடல், பெருங்குடலின் சில பகுதிகளை அகற்றினாலும் அதாவது நீளத்தைக் குறைத்தாலும் உயிர் வாழ முடியும். இவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுகுடலிலோ பெருங்குடலிலோ புற்றுநோய் உருவாகும்போது, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கிவிடுவார்கள். சிறுகுடல், பெருங்குடல் இரண்டுமே மிக நீளமானவை என்பதால் அதன் சிறுபகுதி நீக்கப்படுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!