‘பட்டாம்பூச்சி ஆசனம்’ தரும் அற்புதமான பலன்கள்!

முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் நபர்களுக்கு இந்த போஸ் உதவும். இது தொடை எலும்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்காமல் முதுகு தசைகளுக்கு இதமளிக்கும்.

யோகாசனங்களில் ஒன்றான பட்டாம்பூச்சி ‘ஆசனம்’ தசைகளை தளர்வடைய செய்யும் தன்மை கொண்டது. கழுத்து வலி மற்றும் முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற விரும்புபவர்கள் பட்டாம்பூச்சி ஆசனத்தை முயற்சித்து பார்க்கலாம். இது ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தக்கூடியது. ‘டைட்லி ஆசனம்’, ‘பாத கோனாசனா’ போன்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஆசனத்தை செய்வது எளிதானது.

இந்த ஆசனம் செய்யும்போது இரு கால்களும் இடுப்பு பகுதியை நோக்கி நெருக்கமாக இழுத்து வைக்கப்படும். இரு கைகளும் இறுக்கமாக ஒன்றிணைக்கப்படும். இந்த ஆசனத்தின் சிறப்பு என்னவென்றால், பட்டாம்பூச்சியின் இறக்கைகள் போல கால்கள் அசைந்தாடுவதுதான். முதலில் தரையில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு இரு கால்களையும் மடக்கிக்கொள்ள வேண்டும். அப்போது கால்களின் பாதங்கள் இரண்டும் ஒன்றொடொன்று ஒட்டிய நிலையில், நேராக இருக்க வேண்டும். பின்பு பாதங்களின் மீது கைகளை குவித்து இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து மூச்சை உள் இழுத்து மெதுவாக சுவாசிக்க வேண்டும். அதே சமயத்தில் இரண்டு கால்கள் மற்றும் தொடை பகுதிகளை மேலும் கீழும் அசைக்க வேண்டும். அப்போது முதுகெலும்பு நேரான நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் நபர்களுக்கு இந்த போஸ் உதவும். இது தொடை எலும்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்காமல் முதுகு தசைகளுக்கு இதமளிக்கும். இடுப்பு பகுதிக்கு அருகில் குதிகால்களை வைப்பதால் கீழ் முதுகு பகுதி தளர்வடையும். பின்புற முதுகு தசைகளும் வலுப்பெறும். இந்த பட்டாம்பூச்சி போஸ் கழுத்து, முதுகு, தலை பகுதிகளை தளர்வடைய செய்யும். இந்த பயிற்சியின்போது மூளைக்கு எளிதில் ஆக்சிஜன் சென்றடைவதால் தலைவலியின் தீவிரத்தையும் குறைக்க உதவும். மேலும் இந்த ஆசனம் மேற்கொள்ளும்போது சுவாசம் வழக்கம்போலவே நடைபெறுவதால் எந்த சிரமமும் ஏற்படாது. கவலையில் இருந்து விடுபட வழிவகுக்கும். இந்த ஆசனத்தை செய்யும்போது கால்களை தொடையின் உள்புற பகுதிக்கு அருகில் வைக்க வேண்டியிருக்கும். அந்த தோரணையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தசைகள், மூட்டுகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்த உதவும்.

பட்டாம்பூச்சி போஸ் கருப்பையின் செயல்பாட்டை மேம்படுத்தும். இனப்பெருக்க அமைப்புக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். ரத்தம் மட்டுமின்றி ஆக்சிஜனும் அதிகம் சென்றடைவதால் இனப்பெருக்க அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இந்த ஆசனத்தை செய்வதன் விளைவாக ரத்த ஓட்டம் துரிதமடைவதோடு, சோர்வு மற்றும் சோம்பலையும் குறைக்க முடியும். நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள் அல்லது நடப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் பயனடைவார்கள். அவர்களின் ஆற்றல் மட்டம் மேம்படும். உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த இந்த ஆசனத்தை முயற்சி செய்யலாம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!