‘வைட்டமின்-டி’வை பெற என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்..?

மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.


உயிர்ச்சத்துகளில் வைட்டமின்-டி முக்கியமானது. அதேநேரம் அதிக கவனம் செலுத்தப்படாத வைட்டமின்களில் ‘டி’யும் ஒன்று.

வைட்டமின்-டி என்பது எலும்புக்கும் பற்களுக்கும் அவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது.

வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாக கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவு பொருட்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின்-டியைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான்.

இதை பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20 முதல் 25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயிலில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.

நமது வழக்கமான உணவிலிருந்து வைட்டமின் ‘டி’யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். 3 காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் ‘டி’ தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி சத்தை பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் ‘டி’யைப் பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச் சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் ‘டி’யும் காணப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!