இருசக்கர வாகன பயணமும்.. இம்சை தரும் முதுகு வலியும்!

பெண்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் முதுகெலும்பை பாதிக்கும். சரியில்லாத சாலையில், முறையாக அமராமல், வெகுதூரம் வாகனம் ஓட்டினால் முதுகெலும்பு பாதிப்பு அதிகமாகும்.


குண்டும் குழியுமான சாலையில் வெகுதூரம் பயணம்செய்வது, பின்பு அலுவலகம் சென்று மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலைபார்ப்பது இதுதான் பலரது வழக்கமாக இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இடுப்பு, முதுகு, கழுத்து வலியோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவதியை நினைத்து இருசக்கர வாகன பயணத்தை தவிர்க்க முடியாது. அனைத்து சாலைகளையும் நம்மால் சரிசெய்திட இயலாது. ஆனால் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் வலியின்றி நிம்மதியாக பயணிக்க முடியும்.

பெண்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகள் முதுகெலும்பை பாதிக்கும். சரியில்லாத சாலையில், முறையாக அமராமல், வெகுதூரம் வாகனம் ஓட்டினால் முதுகெலும்பு பாதிப்பு அதிகமாகும். முதுகெலும்புகளுக்கு இடையே அதிர்வுகளைத் தாங்கும் விதமாக ‘ஷாக் அப்சர்வர்கள்’ போன்று மென்மையான டிஸ்குகள் உள்ளன. தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் வெகுதூரம் பயணப்படும்போது அந்த டிஸ்குகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அப்போது முதுகெலும்பின் பலவீனமான பகுதிகளில் இருக்கும் டிஸ்குகள் பலூன் போன்று வெளியே தள்ளும் நிலை உருவாகும். அதை ‘டிஸ்க் ப்ரலாப்ஸ்’ என்று கூறுகிறோம். வெளியே தள்ளும் டிஸ்க் பகுதி அருகில் உள்ள மெல்லிய நரம்புகளை அழுத்தும்போது முதுகிலும், கால்களிலும் தாங்கமுடியாத வலி தோன்றும்.

இருசக்கர வாகனம் ஓட்டும்போது தொடர்ந்து இரு கை களாலும் ஹேன்டிலை பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். நேராக பார்த்தபடியும் வாகனத்தை இயக்கவேண்டும். இல்லாவிட்டால் கழுத்துப்பகுதி தசைகள் அழுத்தத்துடன் இறுகி, கழுத்து வலி உருவாகும். வாகனத்தில் இருந்து இறங்கிய பின்பும் சிறிது நேரம் கழுத்தை அசைக்கமுடியாமல் தவிக்கநேரும். இதை கண்டுகொள்ளாமலேவிட்டால் கழுத்து எலும்புகள் தேய்மானமடைவதோடு, கழுத்து வலியும் தீவிரமாகிக்கொண்டிருக்கும்.

கழுத்து வலி இருப்பவர்கள் போதுமான அளவு ஓய்வெடுக்கவேண்டும். ஓய்வு எடுத்த பின்பும் கழுத்து வலி தீராமல் இருந்தாலோ, கழுத்து வலி தீவிரமாகி தோள் களுக்கும் கைகளுக்கும் பரவினாலோ, கை விரல்கள் வலித்து மரத்துப்போவது போல் உணர்ந்தாலோ, முதுகு வலி காலின் பின்பகுதிக்கு பரவி குதிகால் வரை தாக்கத்தை ஏற்படுத்தினாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். இருமும்போதும், திரும்பும்போதும் முதுகுவலி அதிகரித்தால் நரம்பு களுக்கு அழுத்தம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இந்த தொந்தரவுகளை எல்லாம் தவிர்க்க இருசக்கர வாகனத்தில் நேராக அமர்ந்து இயக்குங்கள். கால்களை புட்ரெஸ்ட்டில் அழுத்தமாக வைத்து ஹேன்டிலை சரியாக பிடித்தபடி நேராக இருப்பது சரியான முறையாகும். குனிந்தபடி அமர்ந்தோ, கழுத்தை முன்னோக்கி நீட்டிக்கொண்டோ வாகனத்தை இயக்குவதை தவிர்க்கவேண்டும்.

வாகனத்தை ஓட்டும்போது காதுகளுக்கு சமமாக தோள்கள் உயரவேண்டும். அதிக வேகத்தில் செல்வது, திடீரென்று பிரேக் பிடிப்பது போன்றவைகளை செய்யக்கூடாது. வேகத்தடைகள் வரும்போது வேகத்தை குறைத்து, நிதானமாக அதனை கடந்துசெல்லவேண்டும்.

வெகுதூரம் வாகனத்தை ஓட்டிச்செல்லும் நிலை ஏற்படும்போது, இடைஇடையே ஓய்வு எடுத்த பின்பு தொடருவது நல்லது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். அந்த பயிற்சிகள் கழுத்து, தோள், கைகள், முதுகெலும்பு போன்றவைகளுக்கு பலம் தரும் விதத்தில் அமையவேண்டும். அதனால் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெற்று, உடற்பயிற்சி செய்வது அவசியம்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!