ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இதை படிங்க..!

கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.


இரவில் நன்றாக தூங்கினாலும் காலையில் எழும்போது சோர்வையும், களைப்பையும் உணர்ந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஆரோக்கியத்தில் ஏதோ குறை இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் உற்சாகத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்து, சோர்வை விரட்டியடித்துவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

மன அழுத்தம்:

பொதுவாக மன அழுத்தம் கொண்டவர்கள் இரவில் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்வார்கள். பகல் பொழுதில் தூக்க கலக்கத்தால் அவதிப்படுவார்கள். அதோடு மனச்சோர்வு அடைந்தவர்கள் தூக்கம் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

விளக்கு வெளிச்சம்:

வீட்டு அறையில் பொருத்தப்படும் செயற்கை விளக்குகள் சிறிதளவேனும் நீல ஒளியை வெளியிடக்கூடியவை. அப்படியிருக்கையில் படுக்கை அறையில் பொருத்தப்படும் விளக்கு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். படுக்கை அறையில் இரவு விளக்கு மூலம் பரவும் வெளிச்சம் அதிகமானால் உடலின் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாட்டை சீராக்க உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு கட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

அதனால் இரவில் நல்ல தூக்கம் பெறுவது கடினமாகிவிடும். மறுநாள் காலையில் சோர்வுடன் எழக்கூடும். தூங்குவதற்கு முன்பு இரவில் அதிக நேரம் செல்போன் பார்ப்பதும் தூக்கத்திற்கு கேடு விளைவித்துவிடும். காலையில் சோர்வை உண்டாக்கிவிடும்.

நீரிழப்பு:

உடலில் நீர்ச்சத்து அளவு குறைவது அமினோ அமிலங்களின் அளவை குறைத்துவிடும். அவைதான் தூக்கத்திற்கு வித்திடும் மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. உடலில் போதுமான அளவு மெலடோனின் இல்லாவிட்டால் இரவில் நல்ல தூக்கத்தை பெற முடியாது. பகல் பொழுதில் சோர்வை உணரக்கூடும்.

தைராய்டு:

தைராய்டு பாதிப்பு கொண்டவர்களும் காலையில் எழும்போது சோர்வை உணரக்கூடும். தைராய்டு பாதிப்பின் தன்மையை பொறுத்து தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நடைபெறும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். மன நிலை, உடல் எடை, உடல் தசை, மூட்டு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. தூக்க சுழற்சியிலும் பாதிப்பு நேரும் என்பதால் காலையில் சோர்வை உணரக்கூடும்.

மதுப்பழக்கம்:

மதுவில் கலந்திருக்கும் ஆல்கஹாலும் தூக்கத்தை சீர்குலைத்துவிடும். அது ஆழ்ந்த தூக்கத்திற்கு துணை புரிவதுபோல் தோன்றும். ஆனால் சில மணி நேரங்களிலேயே தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். குடிப்பழக்கம் உடலில் மந்த நிலையை அதிகரிக்க செய்துவிடும்.

வாழ்க்கை முறை:

கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது சோர்வை அனுபவிக்க நேரிடும். ஆதலால் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்த நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடமாடுவது நல்லது.

ரத்தசோகை:

ரத்தத்தில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாவிட்டால் உடல் சோர்வால் அவதிப்பட வேண்டியிருக்கும். தூக்கத்திலும் அதன் தாக்கம் வெளிப்பட்டு காலையில் எழும்போது சோர்வு உண்டாகும். ஆதலால் தினமும் இரும்புச்சத்து நிறைந்த உணவை சமையலில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கீரை, உலர் திராட்சை, ஆப்ரிகாட் பழம், பட்டாணி, பீன்ஸ், கடல் உணவுகள், கோழி இறைச்சி போன்றவற்றை சாப்பிடலாம்.

மெத்தை:

படுக்கும் மெத்தை தேர்விலும் கவனம் தேவை. மெத்தை உடல் அமைப்புக்கு ஏற்றதாக அமைந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் உடல் உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். தசைப்பிடிப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!