40 வயதை கடந்த பெண்கள் சாப்பிட வேண்டிய புரத உணவுகள்..!

40 வயதை கடந்த பெண்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல் பருமன் பிரச்சினையும் ஏற்படும். அத்தகைய பாதிப்புகளை தடுப்பதற்கு புரதம் அவசியமானது. 40 வயதை கடந்த பெண்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளையும், எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது.

அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தினமும் இரு வேளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை பிரியர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. சைவம் சாப்பிடுபவர்கள் சோயா பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிடலாம். அதில் புரதம் அதிகம் கலந்திருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த பொருட்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் நல்ல கொழுப்பு சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் நீரிழிவு பிரச்சினையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும். விரைவிலேயே வயதான தோற்றம் உருவாகுவதையும் தடுக்கும்.

அதுபோல் வைட்டமின் ஏ, சி. இ, கால்சியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்களும் 40 வயதை கடந்தவர்களுக்கு அவசியம். அவை சூரிய கதிர்வீச்சுகளின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும். வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை தோன்றுவதால் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைந்துபோய்விடும். அதனால் ஹார்மோன் மற்றும் தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 40 வயதை கடந்த ஆண்களை விட பெண்களுக்குத்தான் தசை இயக்கங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் முறையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதும் அவசியமானது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!