வயிற்று பிரச்சனைகளுக்கு வீட்டின் காவலன் ஓமம்!

நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும்.பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன் படுத்தலாம்.


நாம் எல்லோரும் பயன்படுத்தும் ஓர் பொருள் ஓமம் ஆகும். நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும். நம் வீடுகளில் குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை, செரியாமை பசியின்மை போன்றவைகளை உடனடியாக சரிசெய்யும். இப்படிப்பட்ட ஓமம் நம் இல்லத்தில் இருக்கும் ஓர் அற்புத முதலுதவி மருத்துவர். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன் படுத்தலாம்.

இந்தியாவின் மலைப்பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள தாவரம். விதைகள் ஓமம் எனப்படுகின்றன. இவையே மருத்துவத்தில் பயன்படுபவை. இவை காரச்சுவையுடன் கூடியதாகும். மேலும், ஒரு வித சிறப்பு வாய்ந்த நறுமணமும் இதற்கு உண்டு. உணவின் சுவையைக் கூட்டவும் ஓமம் பயன்படுகின்றது. நாட்டு மருந்து கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் ஓமம் கிடைக்கும்.

மருந்துவப்பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :

குறிப்பு: இந்தப் பகுதியில் ஓமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் ஓமச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும். ஓமம் கார்ப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும், வாயுவை அகற்றும், அழுகலகற்றும், வெப்ப முண்டாக்கும், உடலை பலமாக்கும், உமிழ்நீரைப்பெருக்கும், ஓமத்தை உணவில் சேர்த்துக்கொண்டுவர, அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீத பேதி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஓமம் குழந்தை மருத்துவத்திலும் முக்கிய இடம் வகிக்கின்றது. முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு தொடர்பான நோய்களுக்கு மிகவும் பயன்படுகின்றது.

சளி ஓழுகுதல், மூக்கடைப்பு குணமாக :

ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துதூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன், சிறிதளவு பச்சைக்கற்பூரப்பொடியுடன் கலக்குமளவிற்கு நன்றாக நசுக்கி பந்து போலத் துணியில் கட்டி, மூக்கால் நுகர வேண்டும்.

வாயு உபாதை குணமாக :

ஓமத்தை வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு  தேக்கரண்டி அளவு, வெந்நீரில், இரவில் உட்கொள்ள வேண்டும்.

வயிறு மந்தம் குணமாக :

ஓமம், சுக்கு, கடுக்காய்த்தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக்கொண்டு, 1/2 தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும்.

வீக்கம் கரைய :

ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசை போல அரைத்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி, களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வேண்டும்.

வயிற்றுக்கடுப்பு, கழிச்சல் தீர :

ஓமம், மிளகு, வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து, நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்களுக்கு, வேளைக்கு 1.2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவர வேண்டும்.

வயிற்றுவலி குணமாக :

ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசை போலச் செய்து, வயிற்றின் மீது பற்றுப் போடவேண்டும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!