எனையாளும் சாயிநாதா..! பாபாவும்… அந்தப் புத்தகமும்..!


இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு டிசம்பர் மாதத்தின் போது, சென்னையில் பெய்த பெருமழை நினைவிருக்கிறதுதானே! யாரால் மறக்கமுடியும் அந்த மழையால் விளைந்த சேதங்களை? கரையைக் கடந்து தண்ணீர், தெருவுக்குள் வந்தது. வீடுகளுக்குள் புகுந்து துவம்சம் செய்தது. வாகனங்கள் மூழ்கின. இருசக்கர வாகனங்கள் மிதந்தன.

அடையாறு ஓடுகிற பகுதியையொட்டிய பகுதியில் இருக்கிறது அவரின் வீடு. அந்த அன்பர், சாயி பக்தர். நினைக்கும்போதெல்லாம் மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குச் சென்று, சாயிபாபாவை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.

அவரின் வீடு, மழைவெள்ளத்துக்குத் தப்பவில்லை. வீடு முழுக்க தண்ணீர் புகுந்து புறப்பட்டிருந்தது. பாத்திர பண்டங்கள் எல்லாமே வீணாகிவிட்டன. மெத்தைகளும் தலையணைகளும் நாற்காலிகளும் கட்டில்களும் முழுக்க நனைந்து, தண்ணீரில் ஊறி, தனித்தனிப் பாகங்களாக வந்தன. வாஷிங் மிஷினும் ஃபிரிட்ஜூம் முழுவதுமாகச் சேதமாகிவிட்டிருந்தன.

‘’இது வாடகை வீடுதான். சொந்த வீடு ஆழ்வார்பேட்டைல இருக்கு. ஆனா ஒரு கேஸ் விஷயமா, ஆறு வருஷத்துக்கு முன்னாடி, இங்கே வாடகை வீட்டுக்கு வந்தோம். கேஸ் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஒரு பக்கம் சொந்த வீட்ல இருக்கமுடியலியேங்கற சோகம்… இன்னொரு பக்கம் வீடு மொத்தமும் மழைத்தண்ணி புகுந்து எல்லாப் பொருட்களும் நாசமாயிருச்சு.

முக்கியமா, வாசல்ல நிறுத்தி வைச்சிருந்த காரே தெரியாத அளவுக்கு தண்ணி நிரம்பி மூடிருச்சு. கைவைச்சா, செலவு எக்கச்சக்கமாகும். புதுசா குடித்தனம் பண்றதுக்கு எப்படி பொருட்கள், பாத்திரங்கள் வாங்குவோமோ… அப்படித்தான் வாங்கணும்.


நான் என் கணவர்கிட்ட, நொந்துபோய் சொல்லிட்டிருந்தப்போ… அவர்தான் என்னை ஆறுதல்படுத்தற விதமா… ‘எல்லாம் பாபா பாத்துப்பார்.விடு’ன்னு சொன்னார். வீட்டுச் சுவர் முழுக்க, சகதிக்கறைகள். பெயிண்ட் அடிச்சாகணும். ஹவுஸ் ஓணர் ‘நீங்கதான் பாத்துக்கணும்’னு பொதுவாச் சொல்லிட்டுப் போயிட்டார்.

மழைலாம் முடிஞ்சு, ஓரளவு சகஜமான சூழ்நிலை வந்த அன்னிக்கி, அந்த ஆழ்வார்பேட்டை வீடு எங்களுக்குத்தான்னு கோர்ட்ல தீர்ப்பு வருது. அன்னிக்கி வியாழக்கிழமை. நான் மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் போயிருந்தேன். பாபாவை தரிசனம் பண்ணிட்டு வரும்போது, அங்கே இருந்த ஒருத்தர், இன்னொருத்தர்கிட்ட ஏதோ பேசிட்டிருந்தார். அப்போ… ‘சொந்த வீட்ல உக்கார்ற நாள் சீக்கிரமே வந்துரும்’னு சொன்னார். அதை காதுல வாங்கினபடியே வெளியே வந்து, வீட்டுக்குப் போயிட்டிருக்கும் போதுதான், என் கணவர் போன் பண்ணி இந்த விஷயத்தைச் சொன்னார். அப்பதான் கோயில்ல யாரோ பேசிக்கிட்ட, ‘சொந்த வீட்ல சீக்கிரமே உக்கார்ற நாள் வரும்’னு சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப காதுல கேட்டுக்கிட்டே இருந்துச்சு.

அப்புறம்… பாபாவோட கருணையால, எங்களோட சொந்த வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சோம். புதுப்பொருட்களை வாங்கி, நேரா அங்கேயே இறக்கினோம். அந்த வீட்டுச் சாவியையும் பத்திரத்தையும் பாபா காலடில வைச்சி, நமஸ்காரம் பண்ணிக்கிட்டு, குடிபோனோம். இது பாபா கொடுத்த வீடு’ என்று அந்த 56 வயது பெண்மணி நெகிழ்ந்து சொன்னார்.

இப்படி பாபாவின் அருள் செய்த ஆனந்தங்கள் எத்தனையெத்தனையோ!

புனேவைச் சேர்ந்த கோபால் நாராயண் விஷயம் நினைவிருக்கிறதுதானே. மத்திய அரசுத்துறையில் வேலை பார்த்துவிட்டு, ஓய்வு பெற்ற நிலையில் உடலில் ஏற்பட்ட நோயாலும் சேமிப்பு இல்லாத வறுமைச் சூழலாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தார்.


பாபாவின் பக்தரான இவர், ஷீர்டியில் இருந்த போது வாழ்க்கையே வெறுத்துவிட்ட நிலையில் வந்திருந்தார். அதே மனநிலையில் இருந்தவர், அங்கே தங்கியிருந்த வேளையில், தற்கொலை செய்துகொண்டு இறப்பதே மேல் என்கிற கொடூரமான முடிவுக்கு வந்தார்.

அந்த சமயத்தில்… அங்கே இரண்டுபேர் வந்தார்கள்.

ஹோட்டல் முதலாளியும் பாபாவின் அன்பர் ஒருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள். அப்போது கோபால் நாராயண் அறையைக் கடந்தார்கள். சட்டென்று நின்றார் ஹோட்டல் முதலாளி. கோபால் நாராயணனிடம் சென்றார். அந்த முதலாளியின் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அவர்கள் பேசிக்கொண்டு வந்ததும் அந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள் பற்றித்தான்!


பாபாவின் அடியவரை, கோபால் நாராயணனுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அவரிடம் சகஜமாகவே பேசினார். ‘சார் கையில் உள்ள புத்தகம் படித்திருக்கிறீர்களா? இந்தப் புத்தகம், அக்கல்கோட் மகராஜ் அவர்களுடைய வாழ்க்கை சரிதம். அவரின் வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட புத்தகம் இது. இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு கோபால் நாராயண், சுவாரஸ்யமே இல்லாமல் இல்லை என்று பதிலளித்தார்.

‘அப்படியா. அக்கல்கோட் மகராஜ் என்பவர் மிகப்பெரிய ஞானி. தத்துவ ஞானி. முக்காலமும் அறிந்தவர் இவர். நம்முடைய பாபாவின் மதிப்பிற்கு உரியவரும் கூட! இவரின் ஞான உபதேசங்கள், நம் உள்ளுக்குள் ஒளியைத் தரக்கூடியவை’ என்றார் பாபாவின் அடியவர்.

இங்கே ஒரு விஷயம்… கோபால் நாராயணின் தந்தையார், அக்கல்கோட் மகராஜூக்கு மிகப்பெரிய பக்தர். ஆனால் கோபால் நாராயண், சாயிபாபாவின் தீவிர பக்தர்.

‘இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். பயனுள்ளதாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு, ஹோட்டல் முதலாளியிடம் இருந்து அந்தப் புத்தகத்தை வாங்கி, கோபால் நாராயணிற்கு வழங்கினார் அடியவர். பிறகு விருட்டென்று அங்கிருந்து சென்றனர்.

அசுவாரஸ்யத்துடன் புத்தகத்தை வாங்கிய கோபால் நாராயண், வேண்டா வெறுப்பாக ஏதோவொரு பக்கத்தைப் புரட்டினார்.

அந்தப் பக்கத்தில்… சம்பவம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.


அதாவது, அக்கல்கோட் மகராஜின் தீவிர பக்தர் ஒருவர், தீராத நோயால் ரொம்பவே அவதிப்பட்டு வந்தார். இனியும் இந்த வேதனையைத் தாங்க முடியாது என்றெண்ணி, மனம் உடைந்த நிலையில், ஒருநள்ளிரவு வேளையில், கிணற்றில் குதித்துவிட்டார். ஆனால் உயிருக்குப் போராடிய நிலையில் தவித்துக் கதறிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று ஒரு கரம், அவரைப் பற்றியது. அப்படியே அவரை இழுத்து வந்து, கிணற்றுப் படியில் உட்கார வைத்தது.

அந்த பக்தர், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, கண்கள் ஒருநிலைக்கு வந்த நிலையில், அந்தக் கரத்துக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்தார். அதிர்ந்து போனார். அவர்… அக்கல்கோட் மகராஜ்.

கிணற்றில் இருந்து வெளியே அழைத்து வந்த பிறகு, மகராஜ் அவருக்கு உபதேசித்து அருளினார். ‘நல்லதை எப்படி பெறுகிறாயோ… அதேபோல் கெட்டதையும் நீ பெற்றாகவேண்டும். நல்லதோ கெட்டதோ… உன் முந்தைய கர்மாவினால் நீ பெற்ற இவற்றையெல்லாம் அனுபவித்தேயாக வேண்டும். இதுவே தர்மம்! இந்தத் தர்மத்தை விட்டுவிட்டு, இறக்க முற்பட்டால், கர்மத்தின் பலன் கழியாமல் போகும். உன்னையே பின் தொடரும்.

பிறகு இந்த கர்ம பலனைக் கழிக்க, இன்னொரு பிறவி எடுக்கவேண்டும். இதைவிட இன்னும் கொடுமையை அனுபவிக்கவேண்டும். உன்னை நீயே கொல்வதை விடு. இந்தக் கர்ம பலன்களை பல் கடித்து தாங்கு. அதைக் கடந்துவிட நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள். இயற்கையாகவே மரணம் நிகழும் வரை, வாழ்வது என முடிவு செய். சகித்துக் கொண்டு வாழப் பழகு’ என்று சொல்லிவிட்டு அக்கல்கோட் மகராஜ் சென்றார்.

படித்துவிட்டு, கரகரவென கண்ணீர் வழிய அழுதார் கோபால் நாராயண். நானும் சாகத்தான் முடிவு செய்தேன். கிணற்றில் குதித்து இறப்பது எனத் திட்டமிட்டேன். நோயாலும் வறுமையாலும் பீடிக்கப்பட்டு, நொந்து போயிருந்தேன். வாழவே பிடிக்காது போயிருந்தேன்.

இந்த நிலையில் இந்தப் புத்தகம் என் கையில். தடாலென்று ஏதோவொரு பக்கத்தைப் புரட்டினால்… அது என்னைப் போலவே தற்கொலை முயற்சியில் இருந்த, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பக்தரின் அவலச் சம்பவம். அக்கல்கோட் மகராஜ் காப்பாற்றினார் அவரை! இந்தப் புத்தகத்தின் மூலமாக, இந்த புத்தகத்தில் உள்ள இந்தச் சம்பவத்தின் வாயிலாக, என்னை என் தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றியவர்… சாட்ஷாத் பாபாவைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும் என்று அழுதபடியே சிந்தித்தார். தெளிந்தார். ஷீர்டியின் பாபா தரிசன ஹாலுக்குச் சென்று, பாபாவின் முன்னே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பிறகு… அவரின் நோய் பூரணமாக குணமானது. ஜோதிடக் கலையில் பிறந்த ஆர்வத்தால், அந்தக் கலையை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டார். பாபாவை மனதில் நினைத்து வணங்கிவிட்டு, இவர் சொல்லும் ஜோதிடங்கள் அனைத்தும் பலித்தன. வருமானத்துக்குக் குறைவில்லாமல், நிம்மதியுடனும் அமைதியுடனும் ஆனந்தமாக வாழ்ந்தார் கோபால் நாராயண் எனும் பாபாவின் பக்தர்!- Source: thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!