நீண்ட நாட்களாக சொறி, சிரங்கு பிரச்னையா..? இதோ எளிய பாட்டி வைத்திய முறைகள்..!


நீண்டநாள்களாக தோல் பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு எளிய கை வைத்தியங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

1. பூவரசு மரத்தின் இலைகளைப் பறித்து வெய்யில் உலர்த்தி, பிறகு அவற்றை எரித்துச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெய்யில் கலந்து சொறி, சிரங்குகள் மீது தடவினால் அவை குணமாகும்.

2. பூவரசு மரத்தின் வேர்ப் பட்டையைப் பொடியாக்கி, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சிரங்கு மற்றும் புண்கள் மீது பற்றுப்போட்டால் அவை விரைவில் ஆறும்.

3. ஆவாரம் செடியின் இலையைப் பறித்து கொஞ்சம் நீர் சேர்த்து அரைத்து சிரங்குகள் மீது பற்றுப்போட்டு சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளித்தால் ஒரே வாரத்தில் அவை குணமாகும்.


4. நன்றாகப் பழுத்த பூவன் வாழைப்பழத்தைத் தேமல் உள்ள இடங்களில் அழுத்தித் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு சீயக்காய் தேய்த்துக் குளித்தால், சில நாள்களிலேயே தேமல் மறையும்.

5. மணத்தக்காளிக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, முட்டைக்கோஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சொரி, சிரங்கு வராமல் தடுத்துவிடலாம்.

6. அதிகாலையில் புல்கள் மீது படிந்துள்ள நீரைப் பஞ்சால் ஒற்றி எடுத்து, தேமல் மற்றும் படைகள் மீது தடவினால் அவை விரைவில் குணமாகும்.

7. உருளைக்கிழங்கின் தோலை எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு மற்றும் படைகள் மீது பற்றுப்போட்டால் அவை குணமாகும்.

8. நாயுருவி இலையுடன் ஜாதிக்காயைச் சேர்த்து அரைத்து, தேமல் உள்ள இடத்தில் தடவினால், தேமல் விரைவில் மறையும்.

9. பூவரசு மரத்தின் காயை நீர் சேர்த்து நன்றாக அரைத்து படர்தாமரை மீது தடவினால் விரைவில் குணம் பெறலாம்.

10. படுக்கைப் புண்ணால் அவதிப்படுபவர்கள், குப்பைமேனிக் கீரையைப் பறித்து நன்றாக அரைத்துத் தடவினால் விரைவில் அந்தப் புண்கள் குணமாகி நிவாரணம் பெறலாம்.

11. கடுக்காயைத் தணலில் வாட்டி எடுத்துப் பொடியாக்கி, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து படுக்கைப் புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.


12. மஞ்சளுடன் வேப்பம் இலையைச் சேர்த்து அரைத்து சொறி மற்றும் சிரங்குகள் மீது தடவினால் சில நாள்களில் அவை ஆறிவிடும்.

13. கல்யாண முருங்கை இலைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து, படைகள் மீது தடவினால் அவை குணமாகும்.

14. வன்னி மரத்தின் இலையைப் பொடியாக்கி, தேன் சேர்த்துக்குழைத்து, அதில் கொஞ்சம் சுத்தமான தேங்காய் எண்ணெய்யைக் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டால் கரப்பான் நோய் முழுமையாகக் குணமாகும்.

15. பச்சைப் பயிறுடன் நெல்லிக்காயைச் சேர்த்து அரைத்துப் பொடியாக்கி, உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் சரியாகும்.

16. துளசியுடன் கஸ்துாரி மஞ்சளையும் சேர்த்து அரைத்து, உடல் முழுவதும் பூசி குளிர்ந்த நீரில் குளித்துவந்தால், தோலில் வரும் அனைத்து நோய்களையும் தடுத்துவிடலாம்.

17. வில்வ மர இலைகளைப் பறித்து உலர்த்திப்பொடியாக்கி, தினமும் குளிக்கும்போது உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

18. நன்னாரி வேரில் இருந்து சாறு எடுத்து, காலை மாலை இருவேளையும் குடித்தால் தோல் நோய்கள் குணமாகும்.

19. வேப்பிலை மற்றும் நெல்லிமுள்ளி இரண்டையும் நன்றாக அரைத்து வெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசிக்கொண்டால் அக்கி மற்றும் அரிப்பு குணமாகும்.


20. வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள், வெங்காயச் சாற்றை உடல் முழுவதும் தடவிக்கொண்டால் அவை மறைந்துவிடும். உடலும் குளிர்ச்சி பெறும்.

21. பனை நுங்குடன், சந்தனத்தைக் கலந்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவினால், குணம் பெறலாம்.

22. சாதா மஞ்சள் (20 கிராம்), கஸ்துாரி மஞ்சள் (20 கிராம்), கருஞ்சீரகம் (20 கிராம்) மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடியாக்கி, தேங்காய்ப் பாலில் சேர்த்துக் காய்ச்சினால் எண்ணெய்ப் பதம் வரும். இந்த எண்ணெய்யை ஆறவைத்து சொறி மற்றும் படைகள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

23. குளியல் சோப்புடன் சிறிது மருதாணியையும், எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்து அரைத்து, படைகள் மீது தடவி சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளித்தால் குணம் பெறலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!