மூல நோய் வரக்காரணமும்… அதற்கு என்ன தீர்வு..?

மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆசனவாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன.

மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலை சுற்றி உள்ளது வெளி மூலம்.

இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த கசிவை காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம்.

வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தை பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது.

மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்றவற்றால் இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப்பயணம் போன்றவற்றை தவிர்க்கவும். மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல். நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும். குடல்வால் நோய் ஏற்படும்.

முதலில் மலச் சிக்கலை தவிர்க்க வேண்டும். உணவில் அகத்திக்கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.

மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம். கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது. மீன், கருவாடு, கோழி கூடாது. மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும். அதிக காரம் கூடாது.

ஒரே இடத்தில் நீண்டநேரம் அமரக் கூடாது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் பகுதி வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல் வேண்டும். இவ்வாறு செய்து அதன் பாதிப்பை குறைக்கலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!