மழை பெய்தாலும் சந்திராயன் 2 விண்ணில் பாயும்.. சிவன் பேட்டி


இன்னும் இரண்டு தினங்களில் அனுப்பப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

நிலவை ஆராய்வதற்காக நாளை மறுதினம் சந்திராயன்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. சந்திராயன்-2 விண்கலமானது விண்வெளித் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது சந்திராயன்-2 திட்டம் வெற்றி பெற பிரார்த்தனை செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சந்திராயன்-2 விண்கலம் இரண்டு மாதத்தில் நிலவின் தென்துருவத்தை ஆராயத் தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

“சந்திராயன்-2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மழை பெய்தாலும், விண்கலம் ஏவப்படுவதில் எவ்வித பாதிப்பும் இருக்காது. மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணுக்கு மனிதனை அனுப்பம் திட்டம் 2022ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ளது” என்றும் இஸ்ரோ தலைவர் கூறினார்.

முன்னதாக, சந்திராயன்-2 கவுண்டவுன் தொடங்குவதற்கு முன்பு, உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்திற்கு, இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். மடாதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!