பிரபல ஆன்லைன் புட் டெலிவரி ஸ்விகியின் உயரிய பொறுப்பில் தமிழக திருநங்கை..!


பிரபல ஆன்லைன் புட் டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் உயரிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

ஆன்லைனில் புட் டெலிவரி செய்வதில் இன்று ஸ்விகி நிறுவனம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்து குடும்பத்துடன் சாப்பிடுவது சென்னை, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்த ஸ்விகி நிறுவனத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றான முதன்மை திட்ட மேலாளராக திருநங்கை சம்யுக்தா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவராவார்.

அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தொழில்நுட்பம் மற்றும் பேஷன் சார்ந்த நிறுவனங்களில் சம்யுக்தா பணிபுரிந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அவர், அமேசானில் பணி புரிந்தார்.

பின்னர் ஸ்டார்டப் ஒன்றை நிர்வாகித்துள்ளார். இப்போது ஸ்விகி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பான முதன்மை திட்ட மேலாளராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இது குறித்து சம்யுக்தா கூறுகையில், ‘என்னைப் போன்ற மூன்றாம் பாலினத்தவர்கள் பலரும் கல்வியில் பின்தங்கியுள்ளனர். எனக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது. அதனால்தான் முன்னேறினேன்.

தகுதி வாய்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். படிக்க இயலாதவர்களுக்கு பயிற்சி திட்டம் மூலம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

இப்போது நான் பொறுப்பேற்றுள்ள ஸ்விகி நிறுவனம் நிச்சயம் மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிக்கும்’ என கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!