போதும்.. நிறுத்துங்கள்.. விட்டுவிடுங்கள்.. யோசியுங்கள்.. கொதித்தெழுந்த சங்ககாரா!


இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்து பெரிய வைரலாகி உள்ளது.

உலகில் பொதுவாக அரசியல்வாதிகள் பேச வேண்டிய முக்கிய விஷயங்களை அரசியலில் ஈடுபடாத சிலர் பேசுவதுண்டு. நாட்டின் முன்னேற்றம், ஊழல், ஒற்றுமை குறித்து பேசிய டிவி காமெடியன் வொலாடிமர் செலன்ஸ்கிதான் உக்ரைனின் அதிபர் ஆனார்.

அதேபோல்தான் பாகிஸ்தானுக்கு புதிய முகம் கொடுப்பேன் என்று கூறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் அந்நாட்டு பிரதமர் ஆனார். அரசியல்வாதிகள் பேச தவறிய முக்கிய விஷயங்களை இவர்கள் பேசி மக்களை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர்.

அப்படித்தான் தற்போது இலங்கையில் குமார் சங்ககாரா கடந்த சில நாட்களாக அரசியல் பேசி வருகிறார். கடந்த மாதம் ஈஸ்டர் அன்று இலங்கையில் 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல்தான் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் ஆகும். 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து இப்போதும் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக இலங்கையில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், மசூதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இலங்கை தாக்குதலை எதிர்க்கும் வகையில் வரிசையாக இப்படி தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த தாக்குதலில் இதுவரை 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இன்று காலையும் பல இஸ்லாமியர்களின் வீடுகள் இலங்கையில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் தற்போது கலவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது நடக்கும் தாக்குதல் குறித்து அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா டிவிட் செய்துள்ளார். அதில், நிறுத்துங்கள்.. ஆசுவாசம் அடையுங்கள்.. யோசியுங்கள்.. உங்கள் கண்களை கொஞ்சம் திறந்து பாருங்கள். நாம் நம்மை வன்முறையில் இழக்க கூடாது. வெறுப்பும், இனவெறியும் நம் நாட்டை அழிக்கும்.

குமார் சங்கரா கடந்த சில நாட்களாக இலங்கை அரசியலில் விமர்சித்து வருகிறார். தமிழர்கள், இஸ்லாமியர்கள், சிங்களர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால், இலங்கை மிக வேகமாக முன்னேறும். இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால் வரும் ஓசை போலத்தான் நாமும் முன்னேறுவோம் என்று கூட சங்ககாரா பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!