சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ வைக்கும் பங்குனி பெளர்ணமி..!


பங்குனி மாத பெளர்ணமி, விசேஷத்திலும் விசேஷம். இறந்தவர்களுக்காக வழிபட அமாவாசை என்றால், உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கு பெளர்ணமி தினம் சிறப்பானது.

பெளர்ணமியில் பொதுவாக, அம்மன் வழிபாடு சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், பெளர்ணமி யாகம் முதலானவை சிறப்பாக நடைபெறுகிறது.

சில கோயில்களில் விடிய விடிய ஹோமங்கள் நடத்தப்படுவதும் உண்டு.பெளர்ணமியன்று, அம்பாளை வழிபட்டால் குடும்பம் மேன்மை அடையும், துன்பம் என்னும் இருள் நீங்கி வெளிச்சம் என்னும் ஒளி கிட்டும். சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ பெளர்ணமி வழிபாடு மிக முக்கியமானது.

மேலும் பெளர்ணமியில் கிரிவலம் வருவது சிறப்பானது. கார்த்திகை மாத பெளர்ணமி கிரிவலம் சக்தி அளிக்கக்கூடியது. மலையினைச் சுற்றிவருவதால் மனதுக்கு அமைதியும் ஆரோக்யமும் கிடைக்கும்.

நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே, பெளர்ணமி வழிபாடு என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சந்திரனின் ஒளிபூரணமாக பூமியில் படும் இக்காலத்தில் மக்கள் நீர் நிலைகளின் கரைகளில், மலையடிவாரத்தில் வழிபாட்டிடங்களில் ஒன்று கூடி வழிபாடு நடத்தி, கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்வார்கள்.

வருடம் முழுவதும் வரும் ஒவ்வொரு பெளர்ணமியிலும், ஒரு விழா கொண் டாடப்படுகிறது. பங்குனி மாத பெளர்ணமியில் தான், ஸ்ரீ இராமன் சீதாதேவியை மணம்புரிந்து, சீதா இராமனாக காட்சிதந்தது இந்நாளில்தான்.

மதுரைவாழ் சொக்கேஸ்வரர், அன்னை மீனாட்சியைக் கரம்பிடித்ததும் இந்நாளில்தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம்புரிந்ததும், இந்த பெளர்ணமி நளில்தான். கடவுளின் கல்யானம் நடந்த இந்த பங்குனி பெளர்ணமி தினத்தில், திருமணப்பேறு வேண்டி விரதமிருக்கும் கன்னிப்பெண்கள், நல்ல கணவன் கிடைக்கப்பெறுவார்கள்.

வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க பங்குனி பெளர்ணமியன்று தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுங்கள்.

இன்று மாலை துவங்கி, நாளை வரை பவுர்ணமி இருப்பதால், இன்றும் நாளையும், பவுர்ணமி அனுசரிக்கப்படுகிறது. நாளை பங்குனி உத்தரத்தோடு சேர்த்து, பவுர்ணமியும் வருவதால், நாளைய தினம், இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!