`வாட்ஸ் அப் டீலை முடித்துக் கொடுத்தது என் நாய்தான்!’ – சுவாரஸ்ய தகவல் பகிர்ந்த மார்க்

பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக் 2014-ம் ஆண்டு தகவல்தொடர்பு சேவையான வாட்ஸ் அப்பை, 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் விலைகொடுத்து வாங்கியது. இந்த மெகாடீல் எப்படிச் சாத்தியமானது என்பதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றைச் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க்.

வாட்ஸ் அப் நிறுவனரான ஜான் கொம் இந்த டீல் குறித்து சக்கர்பெர்க் வீட்டில் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்திருக்கிறார். பரபரப்பாகச் சென்றுகொண்டிருந்த விவாதத்தின் ஒருகட்டத்தில் குழப்பம் தீராததால் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஜான் கொம். அப்போது சில நிமிடங்களுக்கு அமைதி நிலவியுள்ளது. அப்போதுதான் மார்க்கின் செல்ல நாயான ‘பீஸ்ட்’ அந்த அறைக்குள் நுழைத்திருக்கிறது. ‘யார்டா இவய்ங்க, இப்படி அமைதியா உட்கார்ந்திருக்காய்ங்க’ என்று குழப்பத்துடன் பார்த்திருக்கிறது. பின்பு அப்படியே வாட்ஸ்அப் நிறுவனர் ஜானின் மடிக்கு குதித்துச் சென்றுள்ளது. அதுவரை ஆழ்ந்த சிந்தனையில் அமைதியாக இருந்த ஜான் ரிலாக்ஸாகி நாயைக் கொஞ்சி விளையாடத் தொடங்கியிருக்கிறார். பின்பு உடனே “இது சரியாகத்தான் வரும் என்று தோன்றுகிறது’’ என மார்க்கிடம் கூறியுள்ளார். இதன் பின் சில நாள்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டீல் கையெழுத்தானது. இந்த நிகழ்வைப் பகிர்ந்த மார்க் “எனது நாய் பீஸ்ட்தான் எனது ரகசிய ஆயுதம்” என அந்த நேர்காணலில் கலகலத்துள்ளார்.

ஏற்கெனவே சமூகவலைதளங்களில் சக்கர்பெர்க் பதிவிடும் படங்களால் பிரபலமாக இருக்கும் இந்த பீஸ்ட் என்னும் ஹங்கேரியன் வகை நாய் இன்றும் மார்க்கின் குடும்பத்தின் முக்கிய உறுப்பினராக இருக்கிறது. – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.