`தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பதில் தவறேதுமில்லை!’ – இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பதிலடி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஷானோன் கேப்ரியேலுக்கும் இடையிலான வாக்குவாதம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில், அவ்வப்போது இரு அணியினரிடையே நடக்கும் வார்த்தைப்போர் வழக்கமான ஒன்று. ஆனால் அது கடுமையானதாக மாறும்போது சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுவது உண்டு. செயின்ட் லூசியாவில், டேரன் சமி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷானோன் கேப்ரியேலுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கேப்ரியேலைப்பார்த்து ஜோ ரூட், “அதை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தாதே. தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பது தவறான ஒன்றல்ல’’ என்று கூறிய கருத்து ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் வெளியே கேட்கிறது. அதற்கு முன்னதாக ஷானோன் கேப்ரியேல் என்ன கூறினார் என்பது பதிவாகவில்லை. எனினும், அதற்கு முன்னதாக, ஜோ ரூட்டை தன்பாலின ஈர்ப்பாளராகக் கிண்டலாக ஷானோன் கேப்ரியேல் கூறியிருப்பாரென யூகிக்க முடிகிறது.

ஷானோன் கேப்ரியேலுக்குப் பதிலடியாக ஜோ ரூட் கூறிய கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது. ஜோ ரூட்டின் பதிலடியைப் புகழ்ந்து பலரும் எழுத, ஒரே நாளில் ஹீரோவாக உயர்ந்துவிட்டார் ஜோ ரூட். இந்தச் சர்ச்சை குறித்து கள நடுவர்களிடம் ஜோ ரூட் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், தனது பேட்டிங்கால் பதில் தந்துவிட்டார். தனது சதத்தின் மூலம் இங்கிலாந்து அணியை 448 ரன்கள் முன்னிலை பெறச்செய்து, 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். – Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.