ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போனின் விற்பனை சர்வதேச சந்தையில் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நவம்பர் 3-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிளின் பத்தாவது தலைமுறை ஸ்பெஷல் எடிஷன் ஐபோன்கள் உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இம்ப்ரூவ் எவ்ரிவேர் (Improv Everywhere) என்ற குழுவினர் போலி ஆப்பிள் ஸ்டோர் உருவாக்கி, ஐபோன் பிரியர்களுக்கு பல்பு கொடுத்த சம்பவம் நியூ யார்க் நகரில் அரங்கேறியுள்ளது. மேன்ஹட்டன் நகரின் மெட்ரோ ரயில்நிலைய நுழைவு வாயிலில் ஆப்பிள் லோகோ பொருத்தி, புதிய ஆப்பிள் ஸ்டோர் மெட்ரோ சுரங்கபாதையில் திறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்களுக்கு இம்ப்ரூவ் குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.
இத்துடன் போலி ஆப்பிள் ஸ்டோர் குறித்த நம்பகத்தன்மையை அதிகரிக்க போலி வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க செய்திருந்தனர். சுமார் 50-க்கும் அதிகமானோர் வரிசையில் நின்று கொண்டும், அவர்களில் சிலர் நாற்காலி போட்டு அமர்ந்த காட்சி பொது மக்களிடம் ஆப்பிள் ஸ்டோரின் நம்பகத்தன்மையை அதிகரித்தது.
மேலும் நுழைவு வாயில் அருகே போலி ஆப்பிள் ஊழியர்கள் நிற்க வைக்கப்பட்டு, பொது மக்களை ஏமாற்ற கூடாது என்ற வகையில் ஐபோன் X இருப்பு மிகவும் குறைவாக உள்ளது என்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என போலி ஆப்பிள் ஊழியர் தெரிவித்து வந்தார்.
அப்பகுதியில் இருந்தவர்களில் பலர் அது உண்மையான ஆப்பிள் ஸ்டோர் என நம்ப துவங்கிய நிலையில், சிலர் ஐபோன் X வாங்க வரிசையில் நின்றனர். இம்ப்ரூவ் சார்பில் வரிசையில் நின்றிருந்தவர்கள் வேண்டுமென்றே சுரங்க பாதைக்கு சென்று திரும்ப வரும் போது காலி ஐபோன் பெட்டியுடன் ஆப்பிள் பார்சல் கொண்டு வெளியே வந்தனர்.
நியூ யார்க் நகரில் சில மணி நேரம் கலகலப்பை ஏற்படுத்திய போலி ஆப்பிள் ஸ்டோர் வீடியோவை கீழே காணலாம்..,
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!