உங்க கழிவறை ஒரே நாற்றமடிக்கிறதா..? இதோ இருக்கவே இருக்கிறது இயற்கையான மருந்து..!


வீட்டை சுத்தமாக்குவது என்றாலே எம்மவர்களுக்கு அது பாரிய தலை வலியாய் அமைந்து விடுவதுண்டு. அதிலும் மலசல கூடத்தை சுத்தமாக்குவது என்றால் அதற்கு முகம் சுழிக்காதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

மலசல கூடத்தை இன்முகத்துடன் சுத்தம் செய்பவர்கள் யாருமே இல்லை என்று தான் கூற முடியும். எனினும், வீட்டில் உள்ளவர்களின் நன்மை கருதி அதனை சுத்தம் செய்கிறார்கள்.
இருப்பினும் வீட்டில் கிடைக்கும் சில சிறந்த பொருட்களை வைத்தே நமது கழிவறையை சுத்தம்செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இதன் மூலம் பணம் செலவழிவதையும் தவிர்க்க முடியும்.

அதே நேரம் சுகாதாரமான சூழலையும் உருவாக்க முடியும். அது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
01. 60 மில்லிலீட்டர் எலுமிச்சைசாறு
02. 160 கிராம் பேக்கிங் சோடா
03. அரை மேசைக் கரண்டி வினிகர்
04. 01 மேசைக் கரண்டி ஹைட்ரஜன் பரொக்சைட் (3 வீதம்)
05. 15 – 20 துளிகள் வாசனை எண்ணெய்


செய்முறை
சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சம் சாறு ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வினாகிரி மற்றும் ஹைட்ரஜன் பரொக்சைட் ஆகியவற்றை கலந்து அந்தக் கலவையை முதலாவது பாத்திரத்தில் கலக்க வேண்டும். ஒவ்வொரு துளியாக இதனைக் கலக்க வேண்டும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் குறித்த கலவையுடன் வாசனை எண்ணெயை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு சிறிய கரண்டி ஒன்றின் உதவியுடன் மேற்குறித்த கலவையை சிறுசிறு உருண்டைகள் போல ஆக்கிக் கொள்ளவும். பின்னர் பாச்மன்ட் தாள் ஒன்றை எடுத்து அதில் அந்த உருண்டைகளை காய விடவும்.

குறித்த உருண்டைகள் காய்வதற்கு நான்கு மணித்தியாலம் எடுக்கும். தேவையேற்படின் ஒரு நாளேனும் காயவிடலாம். அவை நன்றாகக் காய்ந்தவுடன் காற்றுப் புக முடியாத பாத்திரம் ஒன்றில் இட்டு கழிவறைக்கு அருகே வைக்கவும்.

கழிவறை எப்போதெல்லாம் அசுத்தமாக உள்ளதோ, அப்போதெல்லாம் ஒவ்வொரு உருண்டையாக கழிவறைக் குழியில் இடவும். வாரத்திற்கு 2 – 3 தடவைகள் இவ்வாறு செய்வதன் மூலம் கழிவறை சுத்தமாகவும் நறுமணத்துடனும் இருக்கும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!