‘ககன்யான்’ விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!


இந்தியா விண்வெளி துறையில் சாதனை படைத்து வருகிறது. அடுத்த கட்டமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து உள்ளது.

கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டுக்குள் ‘ககன்யான்’ விண்கலம் மூலம் இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, உலகளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இது.

இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் அணுசக்தி, விண்வெளித்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் கே.சிவனுடன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்.

அப்போது ஜிதேந்திர சிங் கூறும்போது, “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை இந்தியா 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றும். இந்த திட்டம் குறைந்த செலவிலானதுதான். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும்” என்றார்.

மேலும், “அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. இந்த திட்டம், அந்த வரிசையில் இந்தியாவை நான்காவது நாடாக சேர்க் கும்” என்றும் குறிப்பிட்டார்.

‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நிருபர்களிடம் பேசும்போது, “விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பதற்கான இந்த திட்டம் தொடர்பான சோதனைகள், 2004-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த திட்டம் எங்கள் முன் உரிமை பட்டியலில் இல்லை. அதற்காக இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) எடுத்துக்கொள்ளாது என்று அர்த்தம் ஆகாது” என குறிப்பிட்டார்.

அப்போது மந்திரி ஜிதேந்திர சிங், “விண்வெளிக்கு வீரர் களை அனுப்பி வைக்கும் முடிவு, அரசியல் முடிவுக்கு மேலானது ஆகும். இஸ்ரோவின் கவனம் எல்லாம் தகவல் தொடர்பு, விவசாயம், பருவ நிலை போன்ற முக்கிய துறைகள் சார்ந்த திட்டங்களில் இருக்கிறது. நாங்கள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப திட்டமிட்டு விட்டோம். இது குறிப்பிடத்தகுந்த ஒரு திட்டம் என்பதால் பிரதமர் அறிவிப்பதற்காக காத்து இருந்தோம்” என்று குறிப்பிட்டார்.

விண்வெளிக்கு அனுப்புகிற வீரர்களின் பாதுகாப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளிக்கையில், “வீரர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது” என்று கூறினார்.

‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தொடர்ந்து நிருபர் களிடம் பேசும்போது, “அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நிறைவேற்றுவதற்கு 19 திட்டங்கள் வரிசையில் நிற்கின்றன” என்று குறிப்பிட்டார்.மேலும், “சந்திரயான்-2 திட்டம்தான் மிக முக்கியமான திட்டம். இஸ்ரோவின் திட்டங்களில் எல்லாம் இது மிகவும் சிக்கலான திட்டம் ஆகும். வரும் ஜனவரி மாதம் சந்திரயான்-2 விண்வெளியில் செலுத்தப்படும்” எனவும் கூறினார்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!