மந்திரவாதியை எரித்துக்கொன்ற மர்ம பெண் – போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் செய்யது பஸ்ருதீன் (வயது 63). இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் திருமணமாகி துபாயில் வசித்து வருகிறார். மகன் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மாந்திரீகம் செய்வதோடு குறிசொல்லும் தொழிலும் செய்து வந்தார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.

அங்கு தொழில் அபிவிருத்தி, குடும்ப பிரச்சினையால் தவிப்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாந்திரீக தகடு மற்றும் தாயத்து தயாரித்து கொடுப்பார்.

நேற்று முன்தினம் இரவு தனது கட்டிடத்தில் செய்யது பஸ்ருதீன் குறி சொல்லி கொண்டு இருந்தார். அவரது முன்பு ஏராளமான பெண்களும், ஆண்களும் அமர்ந்து இருந்தனர்.

அவர் முன்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் பர்தா அணிந்திருந்தனர். அதில் பெண் ஒருவர் திடீரென ஒரு மர்மப்பொருளை செய்யது பஸ்ருதீன் மீது வீசினார். அது எளிதில் தீப்பிடிக்கக்கூடிய ‘பாஸ்பரசாக’ இருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த பொருள் பட்டதும், செய்யது பஸ்ருதீன் உடல் முழுக்க தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அவர் அய்யோ… அம்மா… என்று அலறினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து குறி கேட்பதற்காக உட்கார்ந்திருந்த ஆண்களும், பெண்களும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

செய்யது பஸ்ருதீன் மீது மர்மப்பொருளை வீசிய பர்தா அணிந்த பெண்ணும் கூட்டத்தோடு கூட்டமாக தப்பி ஓடி விட்டார். அந்த பெண்ணை செய்யது பஸ்ருதீனின் நண்பர் பிடிக்க முயன்றார். ஆனால் அந்த பெண் பர்தாவை கழற்றி வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இரவு நேரம் என்பதால் அந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உடல் முழுவதும் எரிந்து பலத்த காயம் அடைந்த செய்யது பஸ்ருதீன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக அவர் இறந்து போனார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கியபிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். செய்யது பஸ்ருதீன் சாவுக்கு காரணமான அந்த பெண் யார்? என்று தெரியவில்லை.

அந்த பெண் எதற்காக ’பாஸ்பரசை’ வீசி செய்யது பஸ்ருதீன் உடலில் தீப்பிடிக்க வைத்து அவரை எரித்துக்கொலை செய்தார் என்று தெரியவில்லை. செய்யது பஸ்ருதீனால் பாதிக்கப்பட்டவராக அவர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள். -Source:Maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.