ஐபோன் x விட்ட பிழையை தவிர்க்க சாம்சங் புதிய திட்டம்


சாம்சங் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிட இருக்கும் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் முக அங்கீகார வசதியை பிழையின்றி துல்லியமாக இயங்கும் படி வழங்குவதற்கா பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட ஃபேஸ் ஐடி எதிர்பார்த்த அளவு சீராக வேலை செய்யவில்லை என்பதால், ஆப்பிளை விட சிறப்பான அம்சத்தை கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் சாம்சங் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அம்சத்தை விட இதை செயல்படுத்தும் மென்பொருளை மேம்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்சங்கின் முக அங்கீகார அம்சமானது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு ஏமாற்ற முடியும் என்ற வகையில் பிழைகளை கொண்டிருந்தது. அந்த வகையில் இம்முறை வழங்கப்பட இருக்கும் முக அங்கீகார அம்சமானது ஐரிஸ் ஸ்கேனிங் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களை சாம்சங் இருமடங்கு பலப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே வெளியான பல்வேறு தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் ஐபோன் X-இல் வழங்கப்பட்டதை போன்ற 3D சென்சிங் கேமரா வழங்கப்படும் என்றும் இதன் மூலம் வாடிக்கையாளர்களின் முகத்தை மிக துல்லியமாக கண்டறிய முடியும் என கூறப்பட்டது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட செல்ஃபி கேமராக்களே புதிய கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டு அதிவேகமாகவும், மிக துல்லியமாக இயங்கும் படி மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக முக அங்கீகார அம்சம் வழங்க கூடுதல் ஆட்-ஆன்களை வழங்க சாம்சங் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

கேலக்ஸி S8 போன்றே S9 ஸ்மார்ட்போனிலும் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போனில் S8 பிளஸ் போன்றே 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் சர்வதேச சந்தைகளில் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கின் புதிய எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர் வழங்கப்படலாம் என்றும் அமெரிக்க மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!