கேரளாவிற்கு மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் எவ்வளவு நிதியுதவி கொடுத்தார் தெரியுமா..?


மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் ரூ.4.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு திரும்பி வருகிறது. கேரளாவை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

கேரளாவில் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண மற்றும் சுகாதார பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினருடன் ஐ.நா.வின் ‘யுனிசெப்‘ அமைப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘மைக்ரோசாப்ட்‘ நிறுவன அதிபர் பில்கேட்ஸ், தனது, ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்‘ மூலம் கேரளாவின் மறுசீரமைப்புக்காக 6 லட்சம் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.4.25 கோடி) நிதியாக வழங்கினார். இந்த தொகையை யுனிசெப் அமைப்பிற்கு அவர் அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து பில்கேட்சின் அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், ‘கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

யுனிசெப்பும், இதர தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து வெள்ளம் காரணமாக நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு நாங்கள் வழங்கியுள்ள நிதி, மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்‘ என்று கூறப்பட்டு உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!