ஆரோக்கியத்தை அள்ளி தரும் அவகாடோவை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி..?


பழவகைகளில் ஒன்றான அவகாடோவிற்கு இப்போதேல்லாம் மவுசு அதிகரித்து விட்டது. இதனால் அதன் விலை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாது இந்த பழவகை சந்தைக்கு வந்ததுமே விற்றாகி விடுகின்றது.

பொட்டாசியம், விட்டமின்பி5, விட்டமின்பி6, விட்டமின்சி, விட்டமின்கே, விட்டமின்ஈ, நல்ல கொழுப்புக்கள் மற்றும் பைபர் அடங்கிய இந்த பழத்தை நாம் வீட்டிலேயே ஒரு சிறு பூத் தொட்டியில் உருவாக்கலாம்.

அது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்!

01. அவகாடோ விதையை நன்கு சுத்தம் செய்து எடுத்து அதன் நடுப் பகுதியில் டூத்பிக்களை வட்டமாக குத்த வேண்டும். பின்னர் ஒரு கோப்பையில் தண்ணீர் ஊற்றி அந்தக் கோப்பையில் அவகாடோ விதையை வைக்க வேண்டும். டூத்பிக் குத்தியிருப்பதால் முழு அவகாடோ விதையும் கோப்பைக்குள் செல்லாது. அதன் அரைவாசிப் பகுதி மாத்திரமே கோப்பையில் உள்ள தண்ணீரில் பட்டுக் கொண்டிருக்கும்.


இவ்வாறு செய்து முடிந்தவுடன் நேரடியாக சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்கக் கூடாது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த விதையில் தண்டு மற்றும் வேர்கள் உருவாக ஆரம்பிக்கும். சுமார் ஆறு வாரங்களில் குறைந்தது ஆறு இன்ச் வரை தண்டு வளர்ந்திருக்கும். எனினும் இதனை மூன்று இன்ச்சாக குறைத்து அதனை நடுதல் வேண்டும்.

02. இப்போது பூத்தொட்டி ஒன்றை எடுத்து அதன் அடிப்பகுதியில் சிறு துளையிட்டு உரம் நிரப்பப்பட்ட மண்ணை நிரப்புங்கள். அதில் அவகாடோ விதையை நடுங்கள். நடும் போது குறித்த விதையின் அரைவாசிப் பகுதி மாத்திரம் மண்ணுள் புதையும் படி நடுதல் வேண்டும்.

03. குறித்த பூத்தொட்டியை சூரிய ஒளிபடும் படியாக வைத்து நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவகாடோ வளர்ந்து வரும் போது இதன் இலைகள் மஞ்சள் நிறமாக இருப்பின் தண்ணீர் அதிகமாக ஊற்றப்படுகின்றது எனப்பொருள்.

இதன் போது ஒரு சில நாட்களுக்கு தண்ணீர் ஊற்றாமல் இருப்பது சிறந்தது. அதே போல் இலைகள் கபில நிறமாக மாறுமாயின் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது எனப் பொருள். ஆகவே தண்ணீரை நன்கு ஊற்ற வேண்டும்.

இவ்வாறு செய்தால் உங்கள் பூத்தொட்டியிலேயே அவகாடோ பழங்கள் காய்க்க ஆரம்பிக்கும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!