உலக கோப்பை ஆட்டத்தில் 40 ஆண்டுக்கு பிறகு வெற்றி – கொண்டாட்டத்தில் துனிசியா ரசிகர்கள்..!


துனிசியா அணி , பனமா அணியை 2-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பை வரலாற்றில் தனது இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

21-வது ஃபிபா உலகக் கோப்பை தொடர் ரஷ்யாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த லீக் ஆட்டத்தில் துனிசியா – பனாமா அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் துனிசியாவின் தற்காப்பு வீரர் யாசினெ மெரிஅஹ் செய்த செயலினால் சொந்த அணிக்கு எமனாக மாறினார். அவர் பந்தை கோல் அடிக்காமல் தடுக்க சென்று, பனமா அணிக்கு ‘செல்ஃப்’ கோல் அடித்து விட்டார்.

இதனால் பனமா அணி முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலை வகித்தது.

இதையெடுத்து இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடிய துனிசியா அணி ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் அந்த அணியைச் சேர்ந்த பென் யூசஃப் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலை ஆக்கினார்.

இதைதொடர்ந்து விளையாடிய துனிசியா வீரர்கள் மேலும் ஒரு கோலை அடிப்பதற்கு ஏறளமான வாய்ப்பை உருவாக்கினர். குறிப்பாக ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அணி வீரர் வாஹ்பி காஸ்ரி அசத்தலான கோலாக மாற்றி 2-1 என முன்னிலை பெறச் செய்தார். இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இறுதியில் துனிசியா அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி வட ஆப்ரிக்க நாடான துனிசியா அணிக்கு உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் கிடைக்கும் இரண்டாவது வெற்றியாகும்.

இதன் மூலம் அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் 40 ஆண்டுக்கு பிறகு எழுச்சியை கண்டுள்ளது. மேலும் தங்களது அணியின் வெற்றியை ஒட்டுமொத்த துனிசியா நாடே கொண்டாடி வருகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!