கண்டியில் நடந்த வன்முறைக்கு இலங்கையின் முன்னாள் கேப்டன்கள் கண்டனம்..!


இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் போட்டியை நடத்தும் இலங்கையுடன், இந்தியா, வங்காளதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

இதற்கிடையே, இலங்கையின் கண்டி மாவட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் பத்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலவரம் தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்களான குமார் சங்ககாரா, மகிளா ஜெயவர்தனே ஆகியோர் தங்களது கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜெயவர்தனே கூறுகையில், “இலங்கையில் நடந்த கலவரத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதில், சம்மந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டு வர வேண்டும். மீண்டும் ஒரு உள்நாட்டு போரில் அடுத்த தலைமுறையினர் வளருவதை விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதே போல், குமார் சங்ககாரா கூறியிருப்பதாவது, நாம் அனைவரும் ஒரே நாடு மற்றும் ஒரே மக்கள் என்ற கொள்கையை சேர்ந்தவர்கள். அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்பதே நமது பொதுவான மந்திரமாக இருக்க வேண்டும். வன்முறை மற்றும் இனவெறி தாக்குதலுக்கு இங்கு இடமில்லை. வன்முறைக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!