கேரளாவில் சட்டசபை கூட்டத்துக்கு வெடிகுண்டுடன் வந்த எம்.எல்.ஏவால் பரபரப்பு..!


கேரளா மாநிலத்தின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருந்தார்.

அவர் திடீரென எழுந்து நின்று, தான் கையில் வைத்திருந்த வெடிக்காத குண்டை சபாநாயகரிடம் காண்பித்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கடந்த பிப். 26-ம் தேதி கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் காங்கிரசார் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இவை இரண்டும் வெடிக்காத குண்டுகள். மாநிலத்தில் போலீசாரின் அராஜகம் அதிகரித்து வருகிறது என்றார்.

இதைக்கேட்டதும் முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கோபமடைந்தார். சட்டசபைக்குள் வெடிபொருள், ஆயுதம் கொண்டு வர சட்டத்தில் இடமில்லை என்றார்.

இவரது இந்த செயலுக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவை விதிகளை மீறி சட்டசபைக்குள் வெடிகுண்டை கொண்டு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேரவைத் தலைவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சபாநாயகர் கூறுகையில் விதிகளுக்கு முரணாக இதுபோல் நடந்துகொண்டது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!