பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறும் முயற்சியில் ஏர்செல் வாடிக்கையாளர்கள்…!


ஏர்செல் முடக்கத்தால் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏர்செல் சேவை கடந்த 24-ந்தேதி முதல் முடங்கியது.

தமிழகத்தில் உள்ள டவர்கள் செயல்படாததால் நெட் ஒர்க் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தகவல் தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் ஏர்செல் அலுவலகங்களை முற்றுகையிட்டு தகராறு செய்தனர்.

ஏர்செல் நெட்ஒர்க்கில் இருந்து பிற செல் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மாற முடியாமல் திகைத்தனர். இந்த நிலையில் ஏர்செல் நிறுவனம் தன்னை திவாலாக அறிவிக்கும்படி அறிவிப்பு வெளியிட்டதால் இனி அந்த சேவையில் தொடர முடியாது என்பது உறுதியாகி விட்டது.

அதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது அதே எண்ணுடன் வேறு நெட்ஒர்க்கிற்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ‘யூனிட் போர்ட்டிங் கோடு’ இருந்தால்தான் தற்போது பயன்படுத்தி வரும் ஏர்செல் எண்களை வேறு நிறுவனத்திடம் கேட்டு பெற முடியும்.

அதே எண்களை பெற வேண்டுமானால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட்டிங் கோடு கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அதனை தொடர்ந்து போர்ட்டிங் கோடு எண் அவர்களது செல்போனுக்கு வரும்.

அந்த எண்ணை வைத்துதான் வேறு நிறுவனத்தில் அதே மொபைல் எண்களை பெற முடியும். ஆனால் ஏர்செல் வாடிக்கையாளர் போர்ட்டிங் கோடு பெறுவதில் சிரமம் ஏற்பட்டதால் பி.எஸ்.என்.எல். மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மூலமாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு போர்ட்டிங் கோடு பெற்று இணைப்பை மாற்றி கொள்ளும் வசதியை செய்து வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். சேவை மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. சென்னையில் 47 பி.எஸ். என்.எல். சேவை மையங்கள் உள்ளன.


இவற்றில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் ஊழியர்களை அங்கு பணியில் அமர்த்தி பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

ரிலையன்ஸ் கம்யூனிகே‌ஷன், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் மூடப்பட்டதால் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். பக்கம் மக்கள் மாறி வருகிறார்கள்.

சென்னையில் இதுவரையில் 12 ஆயிரம் பேர் ஏர் செல்லில் இருந்து பி.எஸ்.என்.எல்.க்கு மாறி இருக்கிறார்கள். அவர்களுக்கு போர்ட்டிங் கோடு வாங்கி கொடுத்து அதே எண்களை வழங்கி இருக்கிறார்கள்.

மேலும் 4000 பேர் மாறுவதற்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் விரைவில் பி.எஸ்.என்.எல். சேவை வழங்க அதிகாரிகளும் ஊழியர்களும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்கள்.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற ஆர்வம் காட்டி வருவதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தொலைபேசியகம் ஊழியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்களை இழுத்து கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி விஜயா கூறுகையில், ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகையான உதவிகளை செய்து வருகிறோம். அதே எண்ணில் தொடர விரும்பினால் அதற்கான விதிமுறைகளை செய்து தருகிறோம்.

புதிதாக எண் தேவை என்றால் உடனே வழங்கி வருகிறோம். எவ்வித சிக்கலான, சிரமமான நடைமுறைகளும் தற்போது இல்லை. பி.எஸ். என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ‘சிம்கார்டு’ தட்டுப்பாடு எதுவும் கிடையாது.

குறைந்தபட்சம் ரூ.49 திட்டத்தில் இருந்து ஏராளமான திட்ட சலுகைகள் உள்ளன. குழுவாக செயல்பட்டவர்கள் (சி.யூ.ஜி.) கூட பி.எஸ்.என்.எல்.-க்கு மாறலாம். அதற்கும் வசதிகள் உள்ளன.

எனவே ஏர்செல் வாடிக்கையாளர்கள் எவ்வித குழப்பமும் அடைய தேவையில்லை. பி.எஸ்.என்.எல். சேவை மையங்களை நாடினால் உடனுக்குடன் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!