ஆடி மாதத்தில் மாவிளக்கு போடுவது ஏன்?

பொதுவாகவே மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான ஒரு நிகழ்வாகும். மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு.

அதுவும் ஆடி மாதம் மாவிளக்கு போடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். ஆடி மாதம் மாவிளக்கு போடுவதால் மழை பொழியும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிகவும் விசேஷமான விளக்காக மாவிளக்கு கருதப்படுகிறது. பக்தர்கள் ஏதாவது தவறு செய்யும் பொழுது அம்மனிடம் மன்னிப்பு கேட்பதற்கு மாவிளக்கு போட்டு மனதார மன்னிப்பு கேட்பார்கள்.

உடனே அம்மனும் மனமிறங்கி மன்னித்து அருள்வதாக புராண வரலாறுகள் உண்டு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் சுகபோக வாழ்வு அமையும்.

மாவிளக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்: பச்சரிசி – கால் கிலோ, வெல்லம் 100 கிராம், ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன், சுக்குப்பொடி 1/2 டீஸ்பூன், பச்சை கற்பூரம் சிறிதளவு.

மாவிளக்கு செய்யும் முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வெயிலில் அல்லது மின்விசிறி காற்றில் உலர வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பச்சரிசி மாவுடன் வெல்லம் பாகு காய்ச்சி ஊற்றலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சேர்க்கலாம். அதன் பின் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளலாம்.

இதை சேர்த்தால் தெய்வீக வாசமாக இருக்கும். எல்லாம் ஒன்றாக கலந்துவிட்டு தேவையான அளவிற்கு நெய் சேர்த்து உருண்டை பிடிக்க வேண்டும்.

உருண்டையாக இல்லாமல் ஒரு உருளையாக தட்டி வைத்துக் கொண்டால் தீபம் செய்வதற்கு வசதியாக இருக்கும். உருளை வடிவத்தில் கொண்டு வந்து பின் இரண்டாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

எப்போதும் மாவிளக்கு ஒற்றையில் போடக்கூடாது. 2 தீபங்கள் அல்லது 4 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். ஏனென்றால் இதை நிவேதனமாக சாப்பிட இருப்பதால் வேறு எண்ணெய்களை உபயோகிக்கக்கூடாது.

தனித்தனியாக இப்போது தீப வடிவில் மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்திக் கொள்ளுங்கள். சந்தனம் குங்குமம் இட்டு, அதில் நெய் ஊற்றி 2 திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும்.

மாவிளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக நீங்குவதை நீங்களே உணரலாம். மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!