மாம்பழங்களை வாங்கும்போது நிச்சயம் கவனிக்க வேண்டியவை!

தேங்காயை தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களை தட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம்.

வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், பழத்தில் இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள் ஆபத்தானவை. செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை. கருப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும்.

மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம்.

வேதிக்கற்கள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமான கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சினைகள் என பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் மாம்பழம் வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாம்பழத்தில் இருந்து வெளிவரும் வாசனையை வைத்து மாம்பழங்களைத் தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல், பளிங்கு போல பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கருநிற கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களை தாராளமாக வாங்கலாம். சீசனின் போது மாம்பழங்கள் கல் வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன.

அதாவது, வெள்ளை நிறத்தில் இருக்கும் ‘கால்சியம் கார்பைடு’ கற்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இந்தக்கற்களைப் பொடியாக்கி, ஸ்பிரே போலவும் உபயோகிக்கின்றனர். இந்த ஸ்பிரேக்கள் அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென இருக்கும். அதனால், பழத்தில் இயல்பாக இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள் தென்படாது.

இப்படி கற்கள், பவுடர் பயன்படுத்தப்பட்டால், மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும். எனவே மிக கவனமாக பார்த்து மாம்பழங்களை வாங்க வேண்டும்.

இயற்கையான முறையில் மாம்பழத்தைப் பழுக்கவைக்க வைக்கோல், ஊதுவத்தி, பேப்பர் ஆகியவையே போதுமானவை. வீட்டில் உள்ளவர்கள், குறைந்த அளவுக்குத்தான் மாங்காய்களை வாங்குவார்கள். அவற்றை பேப்பரில் சுற்றிவைத்து, ஓர் அட்டைபெட்டியில் போட்டு, ஊதுவத்தி ஏற்றிவைக்க வேண்டும்.

அதன் புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இரண்டே நாட்களில் மாங்காய்கள் பழுத்துவிடும். பச்சையாக, கடினமான காயாக இருந்தால் பழுக்க இரண்டு நாட்கள் தேவைப்படும். சற்றுப் பழமாக இருந்தால் ஒரு நாள்போதுமானது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!