திடீரென மயக்கம் அடைந்துவிட்டால் செய்ய வேண்டியவை…

நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவதையும், அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்துகொள்வதையும் அறிந்து இருப்போம்.

மயக்கத்தில் இருந்து அவர் விடுபட்டதும் சில நிமிடங்களுக்குக் கைகால்களில் நடுக்கமும் தசைத்துடிப்பும் ஏற்படும். சிலருக்கு இந்த குறுகிய கால மயக்கம் ஏற்படுவதற்குமுன் படபடப்பும் ஏற்படும்.

அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இவை ஏற்பட்டதும் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் இந்த மயக்கம் வராது.

ஒருவேளை மயக்கம் அடைந்துவிட்டால், அந்த நபரை உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். ஆடைகளின் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்திவிடுங்கள்.

தலை கீழேயும் பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு தரையில் படுக்க வையுங்கள். சில நிமிடங்களுக்கு பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது. தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால் மூச்சுக் குழாய் அடைபடாமல் இருக்கும்.

தலைக்கு தலையணை வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, பாதங்களுக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முகத்தில் ‘சுளீர்’ என தண்ணீர் தெளியுங்கள். அப்படிச் செய்யும்போது முகத்தின் நரம்புகள் தூண்டப்படுவதால், மூளை நரம்புகளும் வேகமாக வேலை செய்யும். அப்போது மயக்கம் தெளிந்துவிடும்.

மயக்கம் தெளிந்தபின், குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து குடிக்கத் தரலாம். 5 நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால் அது நீண்டநேர மயக்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.. இதற்கு டாக்டர் உதவியை நாடுவதே நல்லது.

வலிப்பு, இதய கோளாறு,, சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த நோய்கள், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு நீண்டநேர மயக்கம் வரும்.

இதயத்துடிப்பு, ரத்தச்சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருந்தாலும்; மிக அதிகமாக இருந்தாலும் இவ்வகை மயக்கம் வர வாய்ப்பு உண்டு.

அதிக அளவில் மது அருந்துவது, போதை மாத்திரைகளைச் சாப்பிடுவது, மின் அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக்கடி, விஷ வாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் நீண்டநேர மயக்கம் ஏற்படலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!