குளியல் அறையை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது..!

வீட்டின் பிற அறைகளைப் போலவே குளியல் அறைகளுக்கும் அதிக பராமரிப்பு தேவை. குளியல் தொட்டிகள், கை கழுவும் தொட்டி, கழிவறை கோப்பை இவை யாவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லை எனில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிடும்.

இதற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. கொஞ்சம் மெனக்கிட்டால் போதும். முதலில் எத்தனை நாளுக்கு ஒரு முறை குளியல் அறைகளைக் கழுவ வேண்டும் என்று முடிவு செய்துகொள்ள வேண்டும்.

அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. தினமும் செய்தால் மிக நல்லது. கழிவறை கோப்பையை கடைகளில் கிடைக்கும் பல விதமான சுத்தம்செய்யும் திரவங்கள் கொண்டு சுத்தம் செய்யலாம்.

15 அல்லது 20 நிமிடங்கள் ஊறவிட்டு தேய்ப்பான்களைக் கொண்டு சுத்தம் செய்தால் எளிதாய் இருக்கும்.

குளியல் தொட்டிகள் இருந்தால் அவை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் சுத்தம் செய்ய வேண்டும். ஈரத்தன்மை நீடித்திருந்தால் பூஞ்சை ஏற்படும். குளியல் தொட்டியில் பூஞ்சை இருந்தால் நமக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

ஆகையால் மிதமான சுத்தம்செய்யும் திரவம் கொண்டு சுத்தம்செய்து பின் துணியால் ஈரமில்லாமல் துடைத்து விட வேண்டும். இதே முறையில் ஷவர் குழாய்களையும் சுத்தம் செய்யலாம்.

முகம், கை கழுவுதல், ஷேவிங், பல் துலக்குதல் எனக் கை கழுவும் கோப்பைதான் குளியல் அறைகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவது ஆகும்.

ஆதலால் அதனை எப்போதுமே சுத்தமாய் வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னும் அல்லது ஒரு நாளுக்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்ய வேண்டும்.

குளியல் அறைகளின் பெரும்பான்மை இடத்தை டைல்கள் ஆக்ரமித்துள்ளன. அழுக்கான, பொலிவிழந்த டைல்கள் மொத்த பாத்ரூமின் அழகையே பாதித்து விடும். டைல்கள் மீது தெறிக்கும் நீர் மற்றும் சோப் திவலைகளை எளிதில் அகற்றலாம்.

முக்கால் கப் பேக்கிங் சோடாவுடன் கால் கப் பிளீச் சேர்த்து பழைய பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் டைல்கள் பளீரிடும். இது போன்ற சுத்தப்படுத்தும் வேலைகள் செய்யும் போது கைகளுக்குப் பாதுகாப்பாக நீண்ட உறை அணிந்துகொள்ள வேண்டும்.

ஷவர்களில் அடைப்பு ஏற்பட்டு நீர்வரத்து குறைவது சகஜம். இது போன்ற சமயங்களில் ஷவர் ஹெட்டைக் கழற்றி அன்டைலூட்டட் வொயிட் வினிகரால் நிறைத்த பிளாஸ்டிக் கவரில் அமிழ்த்தி வைக்கவும். இது கடைகளில் கிடைக்கும்.

இரவு முழுக்க ஊற விடவும். அடுத்த நாள் பழைய பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்தால் அனைத்து அடைப்பும் நீங்கி நீர் கொட்டும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!