அனல்காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் உயர்ந்து காணப்படும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அனல்காற்று அதிக அவதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

அதுகுறித்த இந்த ஆண்டின் முதலாவது எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அனல்காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி…

என்ன செய்ய வேண்டும்?

* அதிக புரதச்சத்து உணவுகளை உண்பதையும், உச்சி வேளையில் சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் நேரடியாக படும்வகையில் வெளியில் நடமாட வேண்டாம்.

* போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்காதீர்கள்.

* வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலுமிச்சைச் சாறு பானம், மோர், லஸ்சி, சிறிது உப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை பருகலாம். நல்ல காற்று வசதியுள்ள, குளுமையான இடங்களில் இருக்கலாம்.

* நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை உட்கொள்ளலாம். வெளிர் வண்ண, மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடை, தொப்பி அல்லது தலைப்பாகையால் தலையை பாதுகாத்துக்கொள்ளுங்கள். வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

* உள்ளூர் வானிலை தொடர்பான செய்திகளை வானொலி, செய்தித்தாள், டி.வி. மூலம் அறிந்துகொள்ளுங்கள். இந்திய வானிலைத் துறையின் இணையதளத்தையும் பார்க்கலாம்.

* அதிக வெயிலால் ஏற்படும் தலை கிறுகிறுப்பு, மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி, அதீத தாகம், அடர்மஞ்சள் நிறத்தில் குறைவாக சிறுநீர் கழிப்பது, வேகமாக மூச்சு வாங்குதல், அதிவேக இதயத்துடிப்பு குறித்து கவனமாக இருங்கள்.

* யாராவது ஒருவர் அதிக உடல் வெப்பநிலை, மயக்கம், குழப்பநிலையில் காணப்பட்டால், வியர்ப்பது நின்றுவிட்டால் உடனடியாக 108, 102 எண்களை உதவிக்கு அழையுங்கள்.

* அனல்காற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைக்குழந்தைகள், இளஞ்சிறார்கள், கர்ப்பிணிகள், திறந்தவெளியில் பணிபுரிவோர், மாற்றுத்திறனாளிகள், மனநல பாதிப்பு உடையோர், அதிக ரத்த அழுத்தம், இதயநோய் பிரச்சினை உள்ளவர்கள், குளிர்ந்த பகுதிகளில் இருந்து வெப்பமான பகுதிகளுக்கு வருபவர்கள் ஆகியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

* நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள், செல்லப்பிராணிகளை விட்டுச் செல்லாதீர்கள். அப்போது அந்த வாகனங்களுக்குள், அதிகமான வெப்பம் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

* நேரடியாக வெயில், வெப்ப அலை தாக்குதலை தவிருங்கள். பகல் வேளையில் ஜன்னல்கள், திரைச்சீலைகளை மூடிவையுங்கள். குறிப்பாக, உங்கள் வீட்டில் வெயில் தாக்கும் பகுதியில் இரவில், குளிர்ந்த காற்று உள்ளே வரும் வகையில் ஜன்னல்களை கொஞ்சம் திறந்துவைக்கலாம்.

* வெளியில் செல்லவேண்டியிருந்தால், வெயில் தாக்கம் அதிகமில்லாத காலை அல்லது மாலை வேளையில் செல்லுங்கள். உச்சி வேளையில் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!