காசநோயின் அறிகுறிகள் என்ன..?

காசநோய் என்பது மாசடைந்த காற்று மூலம் பரவும் தொற்றுநோய். இந்த நோயை உண்டு பண்ணும் பாக்டீரியாவுக்கு ‘மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ என்று பெயர். உடலில் இது அதிகமாகப் பாதிப்பது நுரையீரலைத்தான்.

என்றாலும் குடல், தோல், எலும்பு, மூளையுறை, சிறுநீரகம், நிணநீர்த் தாரைகள் ஆகியவற்றையும் பாதிக்கும். இந்தக்கிருமிகள் நோயாளியின் சளியில் வெளியேறும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்த நோய் உடனே தொற்றிக்கொள்ளும்.

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் எடை குறைதல், நெஞ்சு வலி, இரவில் உடல் வியர்ப்பது, எந்நேரமும் களைப்பு இருந்தால், அவை காசநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’ என்கிறோம்.

குழந்தைக்கு அடிக்கடி சளியுடன் காய்ச்சல் வருவது, அடிக்கடி மூச்சிளைப்பு ஏற்படுவது, பசியின்மை, உடல் எடை குறைவது அல்லது வயதுக்கு ஏற்றபடி உடல் எடை அதிகரிக்காதது, கழுத்தில் கட்டிகள் நீடிப்பது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

பொதுவாக, காசநோயின் ஆரம்பத்தில் நோயாளியின் சளியில்தான் பாக்டீரியாக்கள் வெளிப்படும். ஆகவே, ஒருவரின் சளியைத்தான் முதலில் ஆராய்கிறார்கள். அதில் பாக்டீரியா இருந்தால், அதன் மரபணுவில் இருந்து டி.என்.ஏ.வை தனியாக பிரித்து எடுக்கிறார்கள்.

இதற்கு ‘சோனிகேஷன்’ எனும் டெக்னாலஜி உதவுகிறது. அதாவது, குறிப்பிட்ட அதிர்வெண்கள் கொண்ட கேளாஒலிகளை மரபணுவுக்குள் அனுப்பும்போது, அதிலுள்ள டி.என்.ஏ. தனியாகப் பிரிந்துவிடும்.

அதை பி.சி.ஆர். தெர்மல் சைக்ளர் எனும் கருவிக்குள் செலுத்தி, அதில் உள்ள மரபணுவின் வகையை கண்டுபிடிக்கிறார்கள். டி.என்.ஏ.வில் காசநோய்க் கிருமியின் மரபணு வகை இருக்கிறது என்றால், அந்த நோயாளிக்குக் காசநோய் இருக்கிறது என்று கண்டறிகிறோம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!