திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற 1½ வயது குழந்தை உட்பட மூவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…!


விக்கிரவாண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தையுடன் தாய் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 35), பெயிண்டர். இவருடைய மனைவி சாவித்திரி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. முரசொலிமாறன் (5), ரூப்ரின் (4) என்ற 2 மகன்களும், மெரிஷா (1½) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் மயிலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று காலை ராஜீவ்காந்தி தனது மனைவி சாவித்திரி, குழந்தை மெரிஷா ஆகியோரை அழைத்துக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் விராட்டிக்குப்பத்தில் இருந்து மயிலத்துக்கு சென்றார்.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மயிலத்தில் இருந்து விராட்டிக்குப்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் அவர்கள் புறப்பட்டனர். காலை 9.40 மணியளவில் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை சந்திப்பு அருகில் சென்றபோது சென்னையில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் விக்கிரவாண்டியை சேர்ந்த அகஸ்டின் என்பவர் அங்குள்ள சாலையை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க லாரியை டிரைவர் இடதுபுறமாக திருப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அப்போது லாரியின் பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த ராஜீவ்காந்தியின் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் ராஜீவ்காந்தி தூக்கி வீசப்பட்டார். அவரது மனைவி சாவித்திரி, குழந்தை மெரிஷா ஆகியோர் லாரியின் சக்கரத்தில் சிக்கி அந்த இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ராஜீவ்காந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி அறிந்த ராஜீவ்காந்தி உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அங்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் நடைபெறும் தொடர் விபத்துகளை தடுக்க இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கக்கோரியும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விபத்தை தடுக்க ‘பேரிகார்டு’ அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விரைவில் மேம்பாலம் அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உறுதியளித்தார்.

இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!